திங்கள், 14 மார்ச், 2011

காப்பி குடிப்பது எப்படி?

காப்பி குடிக்கத் தெரியாதா எங்களுக்கு! நேத்துப்பொறந்த குழந்தை கூட இன்னைக்கு காப்பி குடிக்கறது என்று சொல்பவர்கள் சற்றுப் பொறுக்கவும். இது ரோடோரக் கடையில வாங்கி நாலு மொடக்குல குடிக்கற காப்பி மாதிரி இல்லை. ஜப்பானில் “டீ செரிமனி” என்று வைப்பார்களே அந்த மாதிரி.

{ பாவம் ஜப்பான்காரர்கள் ! விதி அவர்களுடன் எப்போதும் விளையாடுகிறது. யாருடனும் வம்புக்குப் போகாமல் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை இயற்கை ஏன் இவ்வாறு பழி வாங்குகிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரத் தேவையான மன தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களும் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.} 

இரண்டு பேர் காப்பி குடிக்கவேண்டும் என்றால் தேவையானவைகள் - இரண்டு பழைய காலத்து டம்ளர்கள். கால் படிக்குக் கம்மியில்லாமல் கொள்ளளவு இருக்கவேண்டும். அரைப்படி பிடிக்கக் கூடிய வாழைப்பூ சொம்பு ஒன்று. ஒரு படி ஒரு உப்புப்பொரி. சாதாரணப் பொரி இரண்டு உப்புப்பொரி என்று சொல்வார்கள். அது கொஞ்சம் கசக்கும்.
 
கிராமங்களில், வெளியூரிலிருந்து யாராவது ஒரம்பரை (உறவினர்) வந்தால் இரண்டு பேரும் (அதாவது வீட்டுக்காரரும், ஒரம்பரைக்கு வந்தவரும்) வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். வீட்டுக்காரர் உள்ளே பார்த்து “அம்மணீ, யாரு வந்திருக்காங்கன்னு பாரு” ன்னு குரல் கொடுப்பார். வூட்டு அம்மணி வெளியில் வந்து பார்த்துவிட்டு, வாங்கண்ணா, ஊர்ல அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாட்டம் இருக்குது, அப்படீன்னு குசலம் விசாரித்து விட்டு, வீட்டுக்குள் போய் ஒரு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீரும் கூட ஒரு தட்டில் வெத்தலபாக்கும் கொண்டு வந்து வைப்பாங்க. அண்ணா, வெத்தில போடுங்க, காப்பி கொண்டார்றேன்னுட்டு உள்ள போயிடுவாங்க. 

அப்புறமா காப்பி வரும். ரெண்டு டம்ளர்ல நெறயக் காப்பியும், கூட ஒரு வாழைப்பூ சொம்பில நெறய காப்பியும் கொண்டு வந்து வைப்பாங்க. கூடவே ஒரு தட்டத்தில நெறய பொரியும் கொண்டு வந்து வைப்பாங்க. அந்தக்காப்பிய கொஞ்சம் குடிச்சுட்டு, அப்பறமா பொரிய எடுத்து காப்பி டம்ளர்ல போட்டுக்குவாங்க. அப்புறம் அந்தப் பொரியோட காப்பியக் குடிப்பாங்க. காப்பி அரை டம்ளர் ஆனவுடன் வாழைப்பூ சொம்பில இருக்கிற காப்பிய டம்ளர்ல ஊத்தி, பொரியையும் போட்டு டம்ளரை நெறச்சுக்குவாங்க. டம்ளர்ல காப்பி குறையக் குறைய சொம்பில இருந்து நெரப்பீக்குவாங்க. அப்பப்ப பொரியையும் போட்டுக்குவாங்க.

கொண்டு வந்து வச்ச காப்பியெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறமும் காப்பி வேணும்போல இருந்திச்சுன்னா வீட்டுக்காரர் உள்ள பாத்து இன்னும் கொஞ்சம் காப்பித்தண்ணி கொண்டா அம்மணின்னு கொரல் குடுப்பாரு. சித்த நேரத்துல மொத மாதிரியே ரண்டு டம்ளர்ல காப்பியும், ஒரு சொம்பு நெறய காப்பியும், ஒரு தட்டத்தில பொரியும் வந்துடும். அப்பறம் என்ன, பழய மாதிரியே ரவுண்டு கட்ட வேண்டியதுதான்.

மத்தியானம் சாப்பாடு சாப்பிடற மட்டும் இப்படியேதானுங்க குடிச்சிட்டிருப்பாங்க. இதுதாங்க காப்பி குடிக்கிற முறைங்க.