திங்கள், 17 அக்டோபர், 2011

ஜென்டிங்க் ஹைலேண்ட், மலேசியா

ஒரு குறிப்பு - போன பதிவில் விட்டுப்போனது - இந்த நாடுகளில் நம் நாடு போலவே மின்சாரம் 220 வோல்ட். ஆனால் பிளக்குகள் வேறு மாதிரியானவை. அவைகளின் கம்பிகள் சதுரமாக இருக்கும். நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் சாதனங்களை இந்தப் பிளக்குகளில் பொருத்த முடியாது. அதற்கு யூனிவர்சல் அடாப்டர் என்று ஒரு சாதனம் இருக்கிறது. நம் ஊரிலேயே கிடைக்கிறது. விலை 50 ரூபாய். செல்போன், காமிரா பயன்படுத்துபவர்கள் இந்த அடாப்டரைத் தவறாது வாங்கிக் கொண்டு போகவேண்டும்.
அடுத்து செல்போனுக்கு அந்த ஊரில் கிடைக்கும் புதிய சிம் கார்டு போட்டால்தான் வேலை செய்யும். கோலாலம்பூர் ஏர்போர்ட்டிலேயே கிடைக்கிறது. டிராவெல் ஏஜென்ட் வழிகாட்டுவார். இந்த சிம் கார்டில் பணம் மீதி இருந்தால் சிங்கப்பூரிலும் உபயோகப்படுத்தலாம். ஆனால் ரோமிங்க் சார்ஜ் வருவதால் அதிக கட்டணம் ஆகும். ஓரிரு முறை பேசுவதற்குப் போதும். அதிகமாகப் பேசுவதென்றால் சிங்கப்பூரிலும் தனி சிம் வாங்கிக் கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் புதிதாக உருவானவை. அவைகளுக்குப் பெரிய சரித்திரம் கிடையாது. ஆகவே அங்கு புராதன கலாச்சார சின்னங்கள் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக அவர்கள் பலவகையான உத்திகளைக் கடைப் பிடிக்கிறார்கள்.

ஜென்டிங்க் ஹைலேண்ட் என்று சொல்லப்படும் இடம் ஒரு மலைமேல் உண்டாக்கப்பட்ட ஒரு பொழுது போக்குத் தலம். அமெரிக்காவில் இருக்கும் டிஸ்னிலேண்ட் போல ஒரு இடம். முழுவதும் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இடம். உள்ளே போனால் நாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும். இந்த மாதிரி விளையாட்டுத் தளங்களுக்கே உரித்தான அத்தனை விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன. 

நாங்கள் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்தோம். இந்த விளையாட்டுகளில் பங்கு பெற உடல் ஒத்துழைக்கவில்லை.

கீழிருந்து மலை மேல் போய்வர கேபிள் கார் வேலை செய்துகொண்டே இருக்கிறது. சுமார் 20 நிமிடம் பயணம் செய்து மலை உச்சியை அடையவேண்டும். பயணம் செய்யும்போது இந்தக் கேபிள் அறுந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பை விட முடியவில்லை.

படங்களைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்

இங்குள்ள First World Hotel மொத்தம் 6500 அறைகள் கொண்டது என்று சொன்னார்கள். நான் நூறு வரை எண்ணினேன். அதற்கு மேல் எண்ண(?) வரவில்லை. தூக்கக் கலக்கம். பேசாமல் போய்த் தூங்கி விட்டேன். இத்தனை அறையிலுள்ளவர்களுக்கும் காலை இலவச உணவு கொடுப்பதென்றால் எத்தனை ஏற்பாடுகள் வேண்டும் எனப் பாருங்கள். ஆயிரம் பேர் ஒன்றாகச் சாப்பிடக்கூடிய டைனிங்க் ஹால் இருக்கிறது. சமையல்காரர்கள் தேனி போல் சுறுசுறுப்பாக வேலை செய்து அத்தனை பேருக்கும் காலை உணவு கொடுக்கிறார்கள்.


மறுநாள் கீழே இறங்கினோம். அங்கிருந்து கோலாலம்பூருக்கு பஸ்சில் சென்றோம். கோலாலம்பூரில் நாங்கள் பார்த்த முக்கியமான இடங்கள்.

1.   பத்துமலை முருகன் கோவில்: 
   
  
   தமிழர்கள் ஒரு காலத்தில் அதிகமாக மலேசியாவில் இருந்ததன் ஞாபகார்த்தமாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. மலைமேல் உள்ள ஒரு குகையில் முருகன் சந்நிதியும், வள்ளி-தேவயானை சமேத முருகன் சந்நிதியும் இருக்கிறது. பிற்காலத்தில் சுமார் 150 அடி உயர முருகன் சிலையை கோவிலுக்கு முன்பு, ஏறும் படிகளுக்கு அருகில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியாவிற்கு செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய இடம்.

2.   பெட்ரொனாஸ் இரட்டைக் கோபுரம்:


இந்த கோபுரம்தான் மலேசியாவின் அடையாளமாக எல்லா டூர் கம்பெனிகளாலும் காட்டப்படும் சின்னம். இது மலேசியாவின் பெட்ரோல் கம்பெனியாரால் கட்டப்பட்டது. மலேசியாவின் இயற்கை வளங்களில் மிகவும் முக்கியமானது பெட்ரோல். இங்கு கிடைக்கும் பெட்ரோல் நல்ல தரமுடையது. ஆதலால் இதை வெளி நாட்டுக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு தங்கள் தேவைக்கு தரம் குறைவாக உள்ள பெட்ரோலை வெளிநாட்டிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். பிழைக்கத்தெரிந்தவர்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபடியால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

3.   கோலாலம்பூர் டெலிவிஷன் டவர்: 

    
   இது கோலாலம்பூர் டவர் என்று அழைக்கப்படுகின்றது. இதன் உச்சியில் ரேடியோ. டெலிவிஷன் ஒலி, ஒளிபரப்பும் கருவிகள் உள்ளன. இதில் பாதியில் ஒரு பார்வையாளர்கள் அரங்கு இருக்கிறது. அதற்குச் செல்ல லிப்ட் வசதி இருக்கின்றது. அங்கிருந்து பார்த்தால் பல கி.மீ. தூரத்திற்கு காட்சிகள் தெரிகின்றன.


4.   கோலாலம்பூர் வார் மெமோரியல்: 
  
   முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1950 களில் நடந்த உள்நாட்டுப்போர் ஆகியவைகளில் இறந்தவர்களுக்காக ஒரு தேசிய நினைவுச்சின்னம் வைத்திருக்கிறார்கள். மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.

5.   சுதந்திர தின விழா மைதானம்: 


   நம் ஊர் மைதானங்களைப் பார்க்கும்போது இது மிகவும் சிறியதாக இருக்கிறது. அந்த ஊர் ஜனத்தொகைக்கு அது போதும்போல் இருக்கிறது.

6.   புத்திரஜெயா: 
   
   
   
   கோலாலம்பூரில் இடநெருக்கடி காரணமாக அரசு அலுவலகங்களை 25 கி.மீ. தள்ளி ஒரு புதிய ஊர் ஸ்தாபித்து அங்கு மாற்றியிருக்கிறார்கள். கட்டிடங்கள் எல்லாம் விலாசமாக இடம் விட்டு கட்டியிருக்கிறார்கள். ஒரு சர்வதேச கருத்தரங்கு மையம், எல்லா வசதிகளுடனும் கட்டப்பட்டு இருக்கிறது.



7.   மகாராஜா அரண்மனை: 


    
   இந்த ஊரில் மகாராஜா இருக்கிறார். முழநீளப்பெயர். வாயில் நுழையவில்லை.  ஆனால் அதிகாரம் எல்லாம் பிரதம மந்திரிக்குத்தானாம். நாங்கள் அரண்மனை கேட்டையும் காவலாளியையும் மட்டும் பார்த்தோம்.
   
   

கோலாலம்பூர் அவ்வளவுதான். அடுத்தது சிங்கப்பூர்.