வியாழன், 15 டிசம்பர், 2011

பதிவர் சங்கம் தேவையா?

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.


பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.