ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நான் பதிவுலகில் சாதித்தது என்ன?


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இது என்னுடைய 300 வது பதிவு.

மூன்று வருடத்தில் இதைப் பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு வருடத்திலேயே இதைவிட அதிக பதிவுகள் போட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். தான் பதிவராக இருப்பதால் தனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் என்று பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனக்கும் அப்படி ஓரிரண்டு நண்பர்களும், பல அறிமுகங்களும் கிடைத்துள்ளன. பதிவுலகத்திலுள்ள சில பேருக்கு என் பதிவு பரிச்சயமாகி இருக்கிறது. இதைத் தவிர நான் பதிவுகள் எழுதி என்ன சாதித்தேன் என்று இந்தப் புதுவருடத்தன்று யோசித்தால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் பல பதிவர்கள், பதிவு போடுவதால் தனி மனித, சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். தங்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல உதவிகள் கிட்டியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.

இன்னும் ஒரு விஷயம். பதிவுலகில் எல்லோரும் ஆசைப்படுவது என்னவென்றால் தங்கள் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டம் வரவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும். தமிழ்மணம் திரட்டியில் நல்ல ரேங்க் வரவேண்டும். இந்த ஆசைகளில் தவறு ஒன்றும் கிடையாது. நானும் இந்த ஆசையில் சிக்குண்டவன்தான். ஆனால் இந்தப் புது வருட தினத்தன்று  யோசித்தால் இந்த ஆசைக்காக நான் இழந்தது, இழந்துகொண்டிருப்பது மிகவும் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது என்று உணர்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். நிஜ உலகத்தில் பெயர் வாங்கினாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது. மாயா லோகத்தில் பெயர் வாங்கி என்ன செய்யப் போகிறோம். நிஜ உலகில் எனக்குத் தெரிந்தவர்களில், நான் பதிவு எழுதுவதைத் தெரிந்தவர்களை, ஒரு கை விரல்களை மட்டும் விட்டு எண்ணி விடலாம். இப்படிப்பட்ட ஒரு மாயைக்காக நான் எவ்வளவு சமரசங்கள் செய்திருக்கிறேன் என்று பார்த்தால், நான் தேவைக்கதிகமாக விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்த விலை கொடுப்பது அவசியமா என்றும் சிந்திக்கிறேன்.

புது வருடத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று ஆசைப் படுகிறேன். பழைய, எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

வால் அறுந்த நரியின் கதையை எல்லோரும் கேட்டிருக்கிறோம். எங்கோ ஒரு இயந்திர பொறியில் சிக்கி ஒரு நரியின் வால் அறுந்து போய்விட்டது. இது ஒரு பெரிய அவமானம். ஆனால் நரிகள் இயற்கையாகவே புத்திசாலிகளல்லவா? அதனால் அந்த நரி யோசித்து ஒரு திட்டம் போட்டது. மற்ற நரிகள் வரும் வழியில் போய் நின்றுகொண்டது. நரிகள் வருவது தெரிந்தால் உடனே வானத்தைப் பார்த்து நின்று கொள்ளும். வானத்தில் எதையோ பார்த்து பரவசமடைவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும்.

சக நரிகள் பக்கத்தில் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்டால் வாலறுந்த நரி, ஏதோ மயக்கத்திலிருந்து விழித்த மாதிரி பாவனை செய்து “என்ன, ஏதாவது கேட்டீர்களா” என்று கேட்கும். அப்போது மற்ற நரிகள் “ஆமாம், ஏதோ ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாயே, அதுதான் என்னவென்று கேட்டோம்” என்று சொல்லின. அதற்கு வாலறுந்த நரி சொல்லியது: “எனக்கு வால் அறுந்த பிறகு ஆகாயத்தில் கடவுள் தெரிகிறார்” என்றது. இப்படியே பல நாடகள் ஆகின. மற்ற நரிகள் இந்த வாலறுந்த நரி சொல்வது உண்மையாக இருக்கலாமோ என்று நினைக்கத் தொடங்கின. இரண்டொரு நரிகள் வாலை அறுத்துக்கொண்டன. பிறகு அவைகள் வானைப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை.

அப்போதுதான் அவைகளுக்கு மண்டையில் உறைத்தது. ஞானம் பிறந்தது. ஆஹா, இந்த வாலறுந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது பார் என்று கோபமடைந்தன. தாம் ஏமாந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஆனால் இதை வெளியில் சொன்னால் மானம் போகும். ஆகவே நாங்களும் கடவுளைக் கண்டோம் என்று சொல்லுவோம் என்று நினைத்து, புதிதாக வாலறுத்துக்கொண்ட நரிகளும் கடவுளைக் கண்டோம் என்று சொல்ல ஆரம்பித்தன. இவ்வாறாக அந்தக் காட்டிலுள்ள அனைத்து நரிகளும் வாலறுத்துக் கொண்டன.

பதிவுலகத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது உங்கள் பொறுப்பு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புது வருடப் பிறப்பன்று ஏதாவது புது வருடத் தீர்மானங்கள் போடாவிட்டால் நன்றாக இருக்காது. அதற்காக இரண்டு தீர்மானங்கள்.

    1.   பதிவர்கள் தங்கள் பதிவுகளைப் பற்றி ஈ.மெயில் அனுப்பினால் அந்தப் பதிவுகள் புறக்கணிக்கப்படும்.

    2.   பின்னூட்டங்களில் தங்கள் பதிவுகளின் சுட்டிகள் இருந்தால் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது.

                 வணக்கம், நன்றி.