(வயது வந்தவர்களுக்கு மட்டும். அதாவது 70 வயது.)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - குறள்
என்னதான் தேவைக்கு மிஞ்சிய பணமும் வசதியும் இருந்தாலும் மன அமைதி இல்லையேல் என்ன பயன்? மன அமைதிக்குத் திறவுகோல் ஆசையைக் குறைத்தல் மட்டுமே.
ஆசையைக் குறைத்தல் என்றால் ஆசை அறவே இல்லாமல் இருத்தல் என்று பொருளல்ல. தேவையான விஷயங்களில் தேவையான அளவு ஆசை இருக்கவேண்டும். இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அர்த்தம் இல்லை.நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எதிலும் அதீத ஆசை கூடாது என்பதுதான்.
எனக்கு ஆசையே இல்லை என்று சொல்பவர்களும் ஏதாவது சில விஷயங்களின் பேரில் ஆசை வைத்திருப்பார்கள். மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக அப்படிச் சொல்பவர்களும் உண்டு.
நம் வாழ்க்கை இன்பமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படாதவர்கள் இருக்கமுடியாது. இன்பமாக வாழ்வதற்கு சுலபமான வழி துன்பத்தை விலக்குவதே. அப்படி துன்பத்தை விலக்குவதில் இந்த ஆசையைக் கட்டுப்படுத்தல் மிக அவசியமாகிறது.
மனிதனாக வாழ்பவனுக்கு பல கடமைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவது இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று அந்தக் கடமைகளை பலன்களை எதிர்பார்த்து செய்வது. இன்னொன்று பலனை ஆண்டவன் மேல் போட்டுவிட்டு கடமைகளை மட்டும் செய்வது. இரண்டாவது வழியில் ஆசை இல்லை. பலன்கள் ஆண்டவன் கொடுத்த பிரசாதம். இப்படி செய்யும்போது மன உளைச்சல் இல்லாமல் கடமையைச் செய்யலாம். இதைத்தான் "நிஷ்காம்ய யோகம்" என்று கீதையில் கண்ணன் சொல்லுகிறான்.
இப்படி வாழும்போது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஒருவனுடைய மன நிலையைப் பாதிக்காது. தாமரை இலைத் தண்ணீரை பல ஆன்மீகவாதிகள் உதாரணம் சொல்லியிருப்பார்கள். இந்த தாமரை இலைத் தண்ணீரை கூர்ந்து கவனித்தால் ஒன்று புலப்படும். தாமரை இலை தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறது.