ஒவ்வொரு நாட்டிற்கும்,
ஏன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி கலாசாரங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தை எடுத்துக்
கொண்டால் அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்.
பொது இடங்களிலோ, பயண ஊர்திகளிலோ, மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டார்கள். முன்பின்
தெரியாதவர்களிடம் வலியப் போய் பேசுவதை அநாகரிகமாக கருதுவார்கள். எங்கு சென்றாலும் தன்னுடைய
முறை வரும் வரையிலும் காத்திருப்பார்கள். அடுத்தவனை முந்திக்கொண்டு செல்லமாட்டார்கள்.
தமிழர்களின் குணமே
வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும்
அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான்.
கேரளாக்கரர்களை எடுத்துக்கொண்டால் உலகின் எந்த மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன்
அங்கும் ஒரு பிழைக்கும் வழியைத் தேடிக்கொள்வான். பஞ்சாபியர்கள் எதையும் துணிந்து செய்வார்கள்.
ஜப்பான்காரர்கள்
உழைப்பிற்குப் பேர் போனவர்கள். எந்த சங்கடம் வந்தாலும் அதை சகித்துக் கொண்டு, மேற்கொண்டு
செய்ய வேண்டியதைச் செய்யும் பண்புள்ளவர்கள். ஐரோப்பியர்கள் எதையும் திட்டமிட்டு ஒரு
ஒழுங்குடன் செயல்படுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமாக எதையும் செய்யாதவர்கள்.
இந்த வகையில் இந்தியர்களைப்
பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள்
எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அவர்களை எந்தக் காரியத்திலும்
முழுதாக நம்ப முடியாது. கையூட்டு கொடுத்தால் எந்த இந்தியனையும் விலைக்கு வாங்கி விடலாம்.
இத்தகைய எண்ணங்களே அயல் நாட்டில் இந்தியர்களைப் பற்றி பேசப்படுகிறது.
இதற்குக் காரணம்
அவர்களுடைய நேரடி அனுபவங்களே ஆகும். மிளகாய்த்தூள் ஏற்றுமதிக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது.
சில நாட்கள் ஒழுங்காக அனுப்பினார்கள். பிறகு செங்கல்லை நன்கு பொடியாக்கி மிளகாய்த்
தூளுடன் கலப்படம் செய்து அனுப்பினார்கள். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.
“வின்கா ரோசியா”
என்று அழைக்கப்படும் சுடுகாட்டு மல்லி எனப்படும் செடி மருந்து தயாரிப்புக்காக ஏற்றுமதி
ஆர்டர் கொடுத்தார்கள். சுடுகாட்டு மல்லியுடன் பல செடிகளையும் சேர்த்து அனுப்பி அந்த
ஆர்டரைப் பாழாக்கினார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் பல மூடுவிழா நடத்தியதற்குக்
காரணம் நம்பிக்கையின்மைதான்.
சமீபத்தில் மாருதி
தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் இந்தியர்களின் அதீத உணர்ச்சி வசப்படும் தன்மைதான்.
இது மாதிரி பல நிகழ்ச்சிகள் இந்தியத் தொழில் துறையில் தினமும் நடக்கின்றன. பீகார் சுரங்கத்
தொழில் மாஃபியாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. வெளிநாட்டுக்காரன் எந்த
நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்ய வருவான்.
அப்துல் கலாம்
கண்ட வல்லரசுக் கனவு எப்பொழுது பலிக்கப்போகிறதோ?