திங்கள், 3 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்.1


டூர் என்றாலே எல்லோருக்கும் குஷிதான். அதுவும் மாணவர்களுக்குச் சொல்லவேண்டுமா? 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். நான் மதுரை விவசாயக் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆல் இந்தியா டூர், இறுதி ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தார்கள். மாணவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் துணையாகப் போகவேண்டும். மொத்தம் 75 மாணவர்கள், இரண்டு அட்டெண்டர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள். ஆக மொத்தம் 80 பேர். நான்தான் இந்தக்குழுவிற்கு தலைமை.

ஆசிரியர்களும் இப்படி டூர் செல்வது ஒரு மாற்றத்திற்காகத்தான், ஆனால் பொறுப்பு மிக மிக அதிகம். மொத்த மாணவர்களின் நலனும் ஆசிரியர்களின் கையில்தான். அவர்களை பத்திரமாக திருப்பி ஊர் கொண்டு வந்து சேர்ப்பது வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போல்தான் இருக்கும்.

நான் பல டூர்கள் மாணவர்களுடன் போயிருக்கிறேன். என் அதிர்ஷ்டம், எந்த விதமான துர்ச்சம்பவங்களும் நிகழ்ந்ததில்லை. ஆனால் சோதனைகள் பல வந்தன. அவைகளை எப்படி சமாளித்தேன் என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கருவாகும்.

அந்தக் காலத்தில் ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் ரயில் கோச்சில் சரியாக 80 சீட்கள்தான். ஆகவே ஒரு முழு கோச்சுக்கான பர்மிஷன் ரயில்வே ஆபீசுக்கு எழுதி வாங்கினோம். இந்த மாதிரி ஒரு தனி கோச் புக் செய்வதில் என்ன சௌகரியம் என்றால் டூர் முடியும் வரை இந்தக் கோச் எங்கள் வசமே இருக்கும். மாணவர்கள் இந்தக்  கோச்சிலேயே தங்கிக்கொள்ளலாம். ஹோட்டல் ரூம் வாடகை மிச்சமாகும். இந்தக் கோச்சை ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே ஒரு தனி ட்ரேக் இருக்கும். அதில் விட்டு விடுவார்கள். வெளியில் போகவர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி தனிக்கோச்சுகளுக்கு சார்ஜ் மிகவும் குறைவு. இப்போது மிக அதிகமாக ஏற்றி விட்டார்கள் என்று கேள்வி.

ஆசிரியர்களான எங்களுக்கு முதல் வகுப்பு தகுதி இருந்தாலும் நாங்களும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தக் கோச்சிலேயே பயணம் செய்தோம். ஆனால் தங்குவது மட்டும் ஹோட்டலில். அதற்கு காரணம் மாணவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் என்பதுதான். தவிர, நாங்களும் சுதந்திரமாக இருக்கலாம் அல்லவா?

மதுரையிலிருந்து சென்னை வரையிலும் சாதா ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில்தான் பயணம் செய்தோம். சென்னையில்தான் எங்களுக்கு ஸ்பெஷல் கோச் கொடுப்பதாக ஏற்பாடு. ஏனென்றால் மதுரையிலிருந்து சென்னை வரை மீட்டர்கேஜ். (1978ல்) சென்னையிலிருந்துதான் பிராட்கேஜ் பாதை. நாங்கள் சென்னையிலிருந்து போகும் மற்ற ஊர்களுக்கெல்லாம் பிராட்கேஜ் பாதைதான். சென்னை சென்ட்ரல் நிலைய ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட், எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பரின் உறவினர். அவரிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததனால் எங்களுக்கு ஒரு புத்தம் புது கோச் அலாட் செய்திருந்தார்.

மாணவர்களுக்கு அந்தக் கோச்சைப் பார்த்தவுடன் ரொம்பக் குஷி. ஏனென்றால் அந்தக் கோச்சில்தான் ஏறக்குறைய இருபது நாள் அவர்கள் பயணம் செய்வதுடன் தங்கவும் வேண்டும். இப்படிப்பட்ட புது கோச் ஏற்பாடு பண்ணின ஆசிரியரான என் மதிப்பு பல மடங்கு கூடியது என்று சொல்லவும் வேண்டுமா? மும்பையில் இந்தக் கோச்சை ஏறக்குறைய கோட்டை விடப்பார்த்தேன். அதிலிருந்து தப்பித்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம். (அந்தக் கதை பின்னால் வருகிறது)