செவ்வாய், 11 செப்டம்பர், 2012

I have no powers


மும்பையில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு டில்லி புறப்பட்டோம். கோச் மாறியிருக்கிறது என்ற விஷயம் மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை.
 
டில்லியில் எந்தவித தொந்திரவும் ஏற்படவில்லை. அங்கும் எங்கள் வேலைகள் முடிந்த பின் கல்கத்தா (ஹௌரா) விற்கு பயணமானோம். ஹௌரா ஸ்டேஷன் சேர்ந்தவுடன், கோச்சை அதற்குண்டான ட்ரேக்கில் நிறுத்தவேண்டுமே. (ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இந்த மாதிரி டூர் வரும் கோச்சுகளை நிறுத்த ஒரு தனி ட்ரேக் ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கும். கோச்சை இங்கு நிறுத்தினால்தான் வெளியே போகவர சௌகரியமாக இருக்கும்). அதற்காக டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்டிடம் நானும் இரண்டு மாணவர்களும் போனோம். போய் விவரங்களைச் சொல்லி, கோச்சை ஸ்பெஷல் ட்ரேக்கில் நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டோம்.

அவர் “I have no powers”  என்று சொன்னார். திரும்பவும் தயவு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அப்போதும் அப்படியே “I have no powers”  என்று சொன்னார். இன்னொரு முறையும் கேட்டோம். இன்னொரு முறையும் அப்படியே “I have no powers” என்று சொன்னார். மொத்தம் மூன்று முறை ஆயிற்று. எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி சத்தமாக “How much it will cost?” என்றேன். இதைக்கேட்டு அந்த ஆள் கோபப்படுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த மனுஷனுக்கு துளிகூட கோபம் வரவேயில்லை. கூலாக “Fifty Rupees” என்றானே பாருங்கள்.

அடப்பாவி, இதற்காகவா எங்களை இப்படி டென்ஷன் படுத்தினாய் என்று நினைத்துக்கொண்டு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன். அதை வாங்கினவுடன் அவன் செய்ததுதான் வேடிக்கை. உடனே சீட்டிலிருந்து எழுந்து ஒரே ஓட்டமாக ஓடினான். எங்கே ஓடுகிறான் என்று பார்த்தால், நாங்கள் வந்த ரயிலின் என்ஜினுக்கு ஓடினான். ஆமாங்க, ஒரு டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட் ஓடி அன்றுதான் பார்த்தேன்.

அங்கு சென்று அந்த இன்ஜின் டிரைவரிடம் ஏதோ சொன்னான். அந்த டிரைவரும் தலையை ஆட்டிவிட்டு, எங்கள் கோச்சை அந்த ஸ்பெஷல் ட்ரேக்கில் கொண்டு வந்து விட்டான். உலகில் மனிதர்களின் வேறுபட்ட குணாதசியங்களை அன்று நேரில் பார்த்தேன். ஆக ஐம்பது ரூபாய் செலவில் (லஞ்சத்தில்) எங்கள் கோச் சௌகரியமான இடத்தில் நிறுத்தப்பட்டது.