திங்கள், 8 அக்டோபர், 2012

இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்


இயற்கை வழி விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சுகாதாரமானவை. மனிதன் ஆரோக்யமாக வாழ்வதற்கு நல்ல, சுகாதாரமான, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இல்லாதிருப்பது அவசியம். இயற்கை வழி விவசாயம் செய்தால் அத்தகைய உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கும். தவிர, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. நிலவளம் பாதுகாக்கப்படுகிறது.

ஏனெனில் இந்த முறை விவசாயத்தில் இயற்கைக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதில்லை. இயற்கை உரங்கள், இயற்கை வித்துக்கள், இயற்கையில் கிடைக்கும் பூச்சி மருந்துகள் இவைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்படி விவசாயம் செய்யப்படும்போது நில வளம் பாதுகாக்கப்படுகிறது. சத்துள்ள, சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இத்தகைய உணவைச் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இத்தகைய விவசாயத்தை நிச்சயமாக செயல்படுத்த முடியும். அதற்கான மனநிலைதான் வேண்டும். இந்த முறை விவசாயத்தில் பல விதமான பயிர்கள் விளைவிக்கப்படுவதால் நில வளம் பாதிக்கப்படுவதில்லை. பலர் இத்தகைய பண்ணைகளை வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பண்ணைகளைப் பராமரிப்பதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது தவிர, அந்தப் பண்ணைதாரர்களுக்கு இது ஒரு பெருமையும் சேர்க்கும். அவர்கள் லாப நஷ்டம் பார்ப்பதில்லை. அல்லது அவர்கள் கணக்குகள் லாபம் காட்டக்கூடும்.

மனித மனம் விசித்திரமானது. தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்காது. அதனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும். நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேர் செய்வது தவறு என்று சொல்லும். தான் சொல்வது பிரச்சினை மிகுந்தது என்றாலும், நம்பிக்கை இழக்காமல் சொன்னதையே செயல்படுத்துக்கொண்டு இருக்கும்.

இதற்கு இயற்கை விவசாயமும் விலக்கல்ல. இயற்கை விவசாயம் நல்லதுதான். ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே பத்து சதம் விவசாயிகள் கூட இயற்கை விவசாயம் செய்வதில்லை. அதன் நன்மைகள் தெரிந்தும் கூட அவர்களால் இயற்கை விவசாயம் செய்ய முடியவில்லை.

ஏன்? இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய இயற்கை உரங்கள் போதுமான அளவு இல்லை. இந்தியாவில் மொத்தமாக என்ன நடக்கிறது என்று நேரில் போய் பார்க்க முடியாது. நாம் அறிந்ததை வைத்து அறியாததை யூகிக்க முயல்கிறோம். அதுதான் நடைமுறையில் செய்யக்கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு யதார்த்தம், எல்லா மாநிலங்களிலும் விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன், கால்நடைகளை வைத்துத்தான் நிலங்களை உழுது பண்படுத்தினார்கள். விவசாயப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரித்து விட்டது. தீவனப் பயிர்களுக்குப் பதில் வேறு பயிர்கள் பயிரிட்டால் கூடுதல் வருமானம் வருகின்றது. தற்போது பயிரிடப்படும் பெரும்பாலான பயிர்களில் தானியம் மட்டும்தான் கிடைக்கிறதே தவிர, கால்நடைகளுக்கான தீவனம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களினால் விவசாயிகள் பால் மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு எருதுகளை எல்லாம் விற்று விட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சந்தைகளில் முன்பு கால்நடைகள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் செய்வார்கள். இப்போது இந்த கால்நடைகளின் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. காரணம் விவசாயப் பண்ணைகளில் கால் நடைகள் இல்லை. நான் படிக்கும்போது விவசாயக் கல்லூரியில் எருதுகளும் பசுக்களுமாக 200 உருப்படிகள் இருந்தன. தற்போது 20 உருப்படிகள் கூட இல்லை. காங்கயம் பட்டக்காரர் ஆயிரக்கணக்கான எருதுகளும் மாடுகளும் வளர்த்துக்கொண்டு இருந்தார். இப்போது அவரிடம் பெயரளவிற்குத்தான் கால் நடைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய தொழு உரம் மிகவும் அரிதாகி விட்டது. அடுத்ததாக இலைதழைகள். முன்பு இருந்த அளவு மரங்களும் காடுகளும் இப்போது இல்லை. இரண்டாவது, கிடைக்கும் இலை தழைகளை நிலத்திற்கு கொண்டு சேர்க்க அதிக செலவு ஆகிறது. இந்த செலவு விவசாயத்திற்கு கட்டுபடியாவதில்லை.

மனிதக்கழிவுகளைச் சேகரிக்கும் முறைகள் மாறிவிட்டன. முன்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும், மனிதக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நகரத்தைச் சுற்றிலுமுள்ள விவசாயிகள் தானியமல்லாத மற்றப் பயிர்களுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். ( நம்பள்கி அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். சைனாவில் நெற்பயிருக்கு இதுதான் முக்கிய உரம். அங்கு இந்த மனிதக் கழிவுகளை அருவருப்புடன் பார்ப்பதில்லை).

தற்போது அதிகரித்து வரும் கோழிப் பண்ணைகள் கொஞ்சம் இயற்கை எருக்களைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தக் கோழி உரம் விலை அதிகமாகின்றது.

இயற்கை உரங்களின் விலையும் அதிகம். கிடைக்கும் அளவும் குறைவு. இது இயற்கை விவசாயத்திற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை விவசாயப் பண்ணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் இந்த இயற்கை விவசாயம் கட்டுப்படியாகும்.

இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இந்த சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும்.

மக்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.