வெள்ளி, 12 அக்டோபர், 2012

நவீன முதியோர் இல்லங்கள்


மக்களிடையே, குறிப்பாக சில வட்டங்களில் உள்ளவர்களிடம், பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலை நிலவுகின்றது. அதிலும் தன்னுடைய மகன்கள் வெளி நாட்டில் வேலையிலிருந்தால் பணம் அதிகம் துள்ளி விளையாடும். இப்படிப் பட்டவர்களைக் குறி வைத்து இப்பொழுது சில பில்டர்கள் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

அது பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் காட்டும் வசீகரங்கள் சில.

1. முற்றிலும் பாதுகாப்பான தனி வீடுகள்.
2. 24 x 7 பாதுகாப்பு
3. சீனியர் சிடிசன்களுக்கான ஸ்பெஷல் கட்டுமானம்.
4. சென்ட்ரல் கிச்சன்.
5. மருத்துவ வசதி
6. தியான மண்டபம்
7. உடற்பயிற்சி மையம்
8. வாக்கிங்க் போக தனிப் பாதை
9. பிக்னிக் வசதி
10. ரீடிங்க் ரூம்
11. விளையாட்டு அறை
12. கேபிள் டி.வி.
13. லாண்ட்ரி
14. பொது கிளீனிங்க்
15. பிரேயர் ஹால்
16. ஹவுஸ் கீப்பிங்க்

இப்படி வசதிகளை அடுக்கி வரும் விளம்பரங்களைப் பார்த்து விட்டு அயல்நாட்டிலிருக்கும் மகன்/மகள் உடனே அப்பாவிற்கு ஒரு ப்ளாட் புக் பண்ணி விடுவார்கள். ப்ளாட் ஒன்று 25 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை போகிறது. தங்கள் பெற்றோர்களுக்கு, தங்களைப் பெற்ற கடனை இதன் மூலம் தீர்த்த திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்த மாதிரி அமைப்புகளை நீடித்து நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் பலருக்குப் புரிவதில்லை. வீடுகளைக் கட்டி விற்பதுடன் கான்ட்டிராக்டரின் வேலை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அந்த அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த கூட்டமைப்பில் குடியிருப்பவர்களையே சேரும். ஒரு தனி வீட்டிற்கு வேண்டிய பராமரிப்பு வேண்டாமென்றுதான் இத்தகைய கூட்டமைப்புகளுக்கு சீனியர் சிடிசன்கள் வருகிறார்கள். மறுபடியும் அதே வேலை என்றால் அவர்களால் எப்படி நிர்வகிக்க முடியும்?

ஒரு பெரிய குடியிருப்பில், சென்ட்ரல் கிச்சனுடன், பராமரிப்பு வேலைகளை கவனிக்க ஒரு ஆள் போட்டாலும் அவரைக் கண்காணிக்க ஒரு தலைவர் வேண்டும். இப்பொழுது இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. வயதான பின்பும் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திறன் இருப்பது கடினம்.

ஆகவே இந்த மாதிரி சீனியர் சிடிசன் குடியிருப்பில் வீடு வாங்குவது யோசித்து செய்யவேண்டும். பணம் இருக்கிறதென்று அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.

எந்த திட்டமும் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தெரியும். நாளாவட்டத்தில் அதன் கவர்ச்சி மங்கி அதன் உள் விகாரங்கள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் வளராததற்கு காரணம் இதுதான். தொடர்ச்சியான முனைப்பு இருப்பது கடினம்.

பிரச்சினைகள் தோன்றும்போது இந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் அங்கு இருக்கமாட்டார். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களையே சேர்ந்ததாகும். தரமான உணவு என்பது கனவாக மாறலாம். மற்ற எல்லா வசதிகளும் ஆரம்ப காலத்தில் காட்டியது போல் பராமரிக்க முடியாமல் போகலாம்.

அத்தகைய வீடுகளை உங்கள் இஷ்டம்போல் விற்க அல்லது வாடகைக்கு விட பல சங்கடங்கள் ஏற்படும். இந்த சிக்கல்களை எல்லாம் மனதில் கொண்டு இம்மாதிரி குடியிருப்பில் சேருங்கள்.