செவ்வாய், 13 நவம்பர், 2012

ரேஷன் அரிசி தயாராகும் விதம்.


எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும்  "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.