சனி, 15 டிசம்பர், 2012

பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?

உங்களில் அநேகமாக எல்லோரும் ஏதாவதொரு பேங்க்கில் கணக்கு வைத்திருப்பீர்கள். ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அந்த கணக்குக்கான செக் புக், ஏடிஎம் அட்டை ஆகியவைகள் வைத்திருப்பீர்கள். ஏடிஎம் அட்டை உபயோகிப்பதற்கான வழி முறைகளைப் பின்னால் பார்ப்போம். இப்போது செக் உபயோகத்தைப் பற்றி சில தகவல்கள்.

வரும் 1-1-2013 முதல் புதுவகையான செக்குகள் (CTS 2010) உபயோகத்திற்கு வரப்போகின்றன. அதன் வடிவத்தைப் பாருங்கள்.


இதில் முக்கியமான ஒன்று இடது பக்கம் கீழே ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில டிசைன்கள் இருக்கின்றன. இந்த டிசைன் ஒவ்வொரு பேங்க்கிற்கும் வித்தியாசப்படும். இந்த டிசைனை கம்ப்யூட்டரில் சேர்ந்து இருக்கும் ஒரு கருவி ஸ்கேன் செய்து அந்த செக் எந்த பேங்கினுடையது என்று துல்லியமாக கண்டு பிடித்துவிடும். இதனால் என்ன லாபம் என்று பார்ப்போம்.

செக் மூலமாக பணப்பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கலாம். நீங்கள் உங்கள் கடைக்காரருக்கு ஒரு செக் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஸ்டேட் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் கடைக்காரர் கனரா பேங்கில் கணக்கு வைத்திருக்கிறார். அவர் அந்த செக்கை உபயோகித்து இரண்டு விதமாக பணம் பெறலாம்.

ஒன்று அந்த செக்கை நேரில் எடுத்துக்கொண்டு அந்த ஸ்டேட் பேங்க் கிளைக்குப் போய் பணத்தைப் பெறலாம். ஆனால் இதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த செக் உண்மையாக உங்களுக்கு வந்ததுதானா, அதில் குறிப்பிட்டிருக்கும் நபர் நீங்கள்தானா என்று பலவிதமான கேள்விகள் கேட்டு அவர்களுக்கு நம்பிக்கை வந்த பிறகுதான் பணம் கொடுப்பார்கள். ஏனென்றால் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பலவிதமான தில்லுமுல்லுகள் நடந்திருக்கின்றன. சரியான நபருக்கு பணம் சேருவதற்கு பேங்க்தான் பொறுப்பு. ஆகவே அவர்கள் முன் ஜாக்கிரதையாகத்தான் செயல்படுவார்கள்.

இந்த வழி வழக்கமாக செக்குகளை பரிமாறிக் கொள்பவர்களுக்கு உகந்ததல்ல. ஆகவே அவர்கள் இரண்டாவது வழியைக் கையாளுவார்கள். அந்த வழி, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்க்கில் இந்த செக்கைக் கொடுத்து விட்டால் அவர்கள் அந்தப் பணத்தை வசூல் செய்து அவர்களுடைய கணக்கில் சேர்த்துவிடுவார்கள். இந்த நடைமுறை பேங்க்கில் செக்குடன் கூடிய கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஒரு பேங்க்கிலிருந்து இன்னொரு பேங்க்கிற்கு பணப் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்று சிலர் அறியாமல் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு.

ஒவ்வொரு ஊரிலும் "கிளியரிங்க் ஹவுஸ்" என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இதை அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரிய பேங்க் நடத்தும்.  ஒரு பேங்கில் ஒரு நாளில் இது மாதிரி வரும் செக்குகளை எல்லாம் அந்த பேங்க், ஒரு ஆள் மூலமாக இந்த "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு கொண்டுபோய் கொடுப்பார்கள். அங்கு அந்த ஊரில் இருக்கும் அனைத்து பேங்குகளின் அனைத்து கிளைகளிலிருந்தும் இந்த மாதிரி ஆட்கள் செக்குகளைக் கொண்டு வருவார்கள்.

ஒரு பெரிய ஊரில் இந்த இடம் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப்பாருங்கள். நான் நேரில் போனதில்லை. ஆனால் ஏறக்குறைய சென்னை மீன்மார்க்கெட் மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.

அங்கு இந்த செக்குகளை எல்லாம் பிரித்து அந்தந்த பேங்க் கிளைகளுக்கு கொடுப்பார்கள். அந்த பேங்க்குக்கு செக்குகளை கொண்டு போனவரே, இந்தச் செக்குகளை வாங்கிக்கொண்டு தன்னுடைய கிளைக்கு வருவார். அவர் கொண்டு வந்திருக்கும் செக்குகள் அனைத்தும் அந்தக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு காரியங்களுக்காக கொடுத்த செக்குகளாகும்.

இந்தச் செக்குகளை அந்த கிளையில் இருக்கும் ஒரு அலுவலர் பாஸ் செய்வார். அதாவது ஒவ்வொருவருடைய கணக்கிற்குள்ளும் போய், அந்தச் செக்குக்குத் தேவையான பண இருப்பு இருக்கிறதா என்று பார்த்து, பணம் இருந்தால் இந்தச் செக்கிற்கான பணத்தை கழிப்பார். இதுதான் செக் பாஸ் பண்ணுவது என்பது.

அப்போது ஏதாவது செக் பாஸ் ஆகாவிட்டால் உடனே "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு சொல்லவேண்டும். இல்லாவிட்டால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுவிடும்.

நீங்கள் ஒரு செக் உங்கள் கணக்கில் போட்டிருந்தால் அது "கிளியரிங்க் ஹவுஸ்" போய் பாஸ் ஆகி வரவேண்டும். உங்கள் செக் பாஸ் ஆகாவிட்டால் "கிளியரிங்க் ஹவுஸ்" உங்கள் பேங்கிற்கு உடனே தகவல் சொல்லிவிடும். அவர்கள் அந்த செக் பணத்தை உங்கள் கணக்கில் சேர்க்கமாட்டார்கள். அது தவிர பேங்கிற்கு வெட்டி அலைச்சல் கொடுத்ததற்காக உங்களுக்கு ஒரு அபராதம் போட்டு அதை உங்கள் கணக்கிலிருந்து உடனே எடுத்துக் கொள்வார்கள். அதே மாதிரி உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாமல் நீங்கள் யாருக்காவது செக் கொடுத்திருந்தாலும் அதற்கும் அபராதம் உண்டு.

இந்த வேலைகளெல்லாம் முடிந்து ஒரு செக் பாஸ் ஆகி உங்கள் கணக்கிற்கு பணம் வந்து சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். உள்ளூர் செக்குகளுக்கு இந்த கணக்கு. வெளியூர் செக்குகளின் தலைவிதி வேறு மாதிரியானது. அதற்கு ஒரு தனி பதிவு வேண்டும்.

இதுதான் இப்போது இருக்கும் நடைமுறை. இதில் உள்ள சங்கடம் கால தாமதம்தான். இதை தவிர்க்கத்தான் தற்போது புதிய நடைமுறையாக இந்த CTS செக்கைப் புகுத்தியிருக்கிறார்கள்.

இந்த புதிய நடைமுறையில், செக்குகளை "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு நேரில் கொண்டு செல்ல அவசியமில்லை. அந்தந்த பேங்க் கிளையில் உள்ள ஸ்கேனரில் இந்தச் செக்கை போட்டால் அதில் உள்ள விவரங்கள் ஒரு சென்ட்ரல் கம்ப்யூட்டருக்குப் போய் பாஸ் ஆகி உடனே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

எவ்வளவு சௌகரியம் பாருங்கள். நேரம் மிச்சம். அலைச்சல் மிச்சம். வியாபார நிறுவனங்களுக்கு உடனடியாகப் பணம் கிடைத்து விடும். ஆனாலும் முதலில் சில நாட்களில் சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால் இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியம்தான்.

ஆகவே அனைத்து பேங்குகளும் இப்போது இந்த புதிய செக்குகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. இது வரை வாங்காதவர்கள் உடனடியாக வாங்கி விடுங்கள். புது வருடத்திலிருந்து பழைய செக்குகள் அந்தந்த பேங்கில் பணம் வாங்குவதற்கு மட்டுமே பயன்படும். வேறு  யாருக்கும் அந்த செக்குகளைக் கொடுக்க முடியாது.

இன்னொரு விஷயம். இந்தச் செக்குகளை எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும். ஏதாவது அடித்தல் திருத்தல்கள் இருந்தால் செக் பாஸ் ஆகாது. அப்போது புது செக்தான் எழுதவேண்டும். இரண்டாவது எழுதுவது அழுத்தமான கலர் இங்க் உள்ள பேனாவால்தான் எழுதவேண்டும். மங்கலான எழுத்துக்களை ஸ்கேன் மிஷின் படிக்கமுடியாது.

பின் குறிப்பு: இந்தப் பதிவு நியாயமாக திரு. நடனசபாபதி மாதிரி பேங்கில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் எழுத வேண்டும். ஆனால் நானும் (ஒரு பிரபல பதிவர்) பதிவு எழுத சமாசாரம் வேண்டுமல்லவா? அதனால் முந்திக்கொண்டேன். இந்தப் பதிவில் உள்ள ஓட்டை உடைசல்களை திரு. நடனசபாபதி அவர்கள் அலசுவார். அவருக்கும் ஒரு பதிவிற்கு வழி காட்டிவிட்டேன்.