புதன், 19 டிசம்பர், 2012

இலவச கம்ப்யூட்டர் மென்பொருட்கள்

இலவசம் என்றாலே மக்களுக்கு ஒரு ஆர்வம் வந்து விடுகிறது. அது தேவையோ இல்லையோ, வாங்கிக்கொள்வார்கள். அதிலும் ஒன்றுடன் திருப்தி அடையமாட்டார்கள். இரண்டு, மூன்று என்று எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவிற்கும் ஆசைப்படுவார்கள். ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கொடுக்கப்படும் இலவச பைகளை இன்னொன்று என்று கேட்டு வாங்காதவர்கள் அபூர்வம். (நானும் அப்படித்தான்). இலவச சேலைகளுக்கு ஆசைப்பட்டு கூட்டத்தில் சிக்கி உயிர்த்தியாகம் செய்த பெண்மணிகளின் கதைகள் தமிழ்நாட்டில் அநேகம்.

கம்ப்யூட்டருக்கான பல இலவச மென் பொருட்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இவைகளைப் பற்றி நம் பதிவுலகத் தோழர்களும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள். இந்த மென்பொருட்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

பல மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதன் காரணம் அந்த தளங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன. அதிலிருந்து வருமானம் கிடைத்து விடுகிறது. இந்த இலவச மென்பொருட்கள்,  தங்கள் தளத்தை அதிக வாசகர்கள் பார்க்கட்டும் என்பதற்காகத்தான்.

சில தளங்கள் தங்கள் இலவச மென்பொருட்களுடன் வேறு சில புரொக்ராம்களையும், உங்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் கொடுத்து விடுவார்கள். அந்த புரொக்ராம் ஆபத்தில்லாமலும் இருக்கலாம், சில சமயம் ஆபத்துடனும் இருக்கலாம். ஆகவே இலவச மென்பொருட்களைத்  தரவிறக்கும்போது இந்த கூடுதல் மென்பொருட்களும் சேர்ந்து வராமலிருக்க ஜாக்கிரதையாக இருக்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மற்றும் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்கள் பல கம்பெனிகளுக்கு பல காரணங்களுக்காகத் தேவைப்படுகின்றன. இந்த மாதிரி விவரங்களைச் சேகரிப்பதற்காகவும் பல இலவச மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

பெரிய மென்பொருள் தயாரிக்கும் கம்பெனிகள் கூட அவர்களின் லீகல் வெர்ஷனை உபயோகிக்கிறார்களா இல்லை பைரேடட் வெர்ஷனை உபயோகப்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிக்க இலவசமாக சில மென்பொருட்களைக் கொடுப்பார்கள். அவைகள் இந்த உளவு வேலையையும் செய்யும்.

தவிர இந்த மென்பொருட்களை விளம்பரத்திற்காகவும், 30 நாட்கள் அல்லது 60 நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்திப் பார்ப்பவர்களில் ஒரு சதம் நபர்கள் அந்த மென்பொருளை விலைக்கு வாங்கினாலும் அவர்களுக்கு லாபமே.

ஆகவே இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசியுங்கள்.

1. அந்த மென்பொருள் உங்களுக்கு அவசியமா?

2. அந்த வேலையைச் செய்யும் மென்பொருள் உங்களிடம் ஏற்கெனவே இல்லையா?

3. அந்த மென்பொருளை உங்கள் நண்பர்கள் யாரேனும் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறார்களா?

4. உங்கள் கம்ப்யூட்டரில் நல்ல ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்ற பதில் வந்தால் அந்த மென்பொருளைத் தரவிறக்குங்கள்.

இலவசமாக கிடைக்கிறது என்பதால் எனக்கு ஒன்று, எங்க ஆத்தாளுக்கு ஒன்று என்று ஆசைப்பட வேண்டாம்.