வெள்ளி, 11 ஜனவரி, 2013

மனிதனுக்கு ஓமெகா-3 சத்து தேவையா?


சரவணன் போட்டிருந்த பின்னூட்டம்.
மீன் எண்ணெய் இல்லாத தாவர ஒமேகா-3 வெஜிடபிள் ஆயில் பத்தி எழுதுங்களேன். அது நல்லதா?

அடுத்து எந்த சமையல் எண்ணெய்கள் நல்லது? இது பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் மாற்றி மாற்றி எழுதுவதால் குழப்பமாக இருக்கிறது. இதையும் ஒரு பதிவிடுங்கள்!




ஓமெகா-3 சத்து - இதைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுத்துள்ள லிங்க்கில் இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Omega-3_fatty_acid

இது கொஞ்சம் டெக்னிகலா இருக்கும். எளிய முறையில் நான் கொடுக்கும் விளக்கம்  கீழே.

மனிதனின் உணவில் முக்கியமாகத் தேவையானவை மூன்று - அவை - மாவுச்சத்து, புரதம், எண்ணைச்சத்து.

எண்ணைகள்  (கொழுப்பு என்றும் சொல்வார்கள் - பதிவுகளில் சொல்லும் கொழுப்பு அல்ல) ஒரு வகையான வேதியல் கூட்டுப்பொருள். இதில் பல விதமான கொழுப்பு அமிலங்கள் சேர்ந்திருக்கின்றன. அவைகளில் சில நல்லவை, சில அவ்வளவாக நல்லவை அல்லாதவை.

இந்த நல்ல அமிலங்கள் உள்ள எண்ணை வகைகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சாதாரணமாக திரவ ரூபத்தில் இருக்கும் எண்ணை வகைகள் அனைத்திலும் இந்த நல்ல வகையைச் சேர்ந்த அமிலங்கள் இருக்கின்றன. சில எண்ணைகளில், சூரியகாந்தி, லின்சீடு, அரிசித்தவிட்டு எண்ணை ஆகியவைகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.

வெண்ணை, மாமிசங்களில் உள்ள கொழுப்புச்சத்துகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் குறைவு. ஆகவே அவைகளை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த நல்ல வகையைச் சேர்ந்த கொழுப்பு அமிலங்களை ஒமெகா-3 அமிலங்கள் என்றும் சொல்வார்கள். மனிதனில் உடல் வாகைப் பொருத்து சிலருக்கு இந்த அமிலங்கள் சேர்ந்த எண்ணை வகைகளைப் பயன்படுத்தினால் நல்லது என்று டாக்டர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த ஒமெகா-3 வகை அமிலங்களை சர்வ ரோக நிவாரணி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை நல்லவை. அவ்வளவுதான்.

இந்த ஒமெகா-3 வகை அமிலங்கள் மீன் எண்ணையில் அதிகமாக இருக்கிறது. தாவர எண்ணைகளில் கொஞ்சம்தான் இருக்கிறது. ஆகவே மீன் எண்ணை டாக்டர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரையில் லாபம், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,   ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, என் கல்லா நிறைந்தால் போதும் என்று கொள்ளையடிக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கு இது இன்னொரு வரப்பிரசாதம்.

இதில் ஒமெகா-3 இருக்கிறது என்று சொன்னால் அதை, என்ன விலையானாலும் கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். பிறகு என்ன, காசை வாங்கி கல்லாவில் போட மருந்துக் கம்பெனிக்காரர்களுக்கு கசக்குமா, என்ன? இதுதான் இப்போது நடக்குது.

நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் நல்லெண்ணையும் கடலை எண்ணையுமே மிகச்சிறந்தவை. அவைகளை அளவுடன் பயன்படுத்தினாலே போதும். வேறு எந்த எண்ணையையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ எண்ணை என்பது நல்ல அளவாகும்.

நம் ஊருக்கு தேங்காய் எண்ணையை, தலைக்கு தேய்க்க மட்டும் உபயோகிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி வளர்க்காதீர்கள்.