சனி, 12 ஜனவரி, 2013

குளியல் அறை எப்படி இருக்கவேண்டும்?


முன்னொரு காலத்தில் மனிதர்கள் கிராமங்களில் வசித்தார்கள். அவர்களின் முக்கிய தொழில் விவசாயம். அந்தக் காலத்தில் ஜனங்கள் விடிவதற்கு முன் எழுந்தார்கள். எழுந்தவுடன் கம்மாய்க் கரைக்கோ, வாய்க்கால் கரைக்கோ சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு அப்படியே அவரவர் கழனிகளுக்குச் சென்று அன்றாட வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

பொழுது விடிந்து சூரியன் பனைமரம் உயரம் போன பிறகுதான் அவர்களுக்கு பழைய சோறு வந்து சேரும். இப்படியாக அன்று முழுவதும் பாடுபட்டு முடித்தபின், பொழுது சாய்ந்த பிறகு வீடு வந்து சேர்வார்கள். அதன் பிறகுதான் குளியல் நடக்கும். வீட்டு வாசலில் ஒரு கல் இருக்கும். அதன் மேல் இவன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்வான். இவன் ஊட்டுக்காரி வெந்நீர்த் தவலையில், காய்ச்சிய வெந்நீரைக் கொண்டுவந்து சொம்பில் மோண்டு ஊற்றி, இவனைக் குளிப்பாட்டுவாள். முதுகு தேய்த்து விடுவதென்று ஒரு பழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. குளித்து விட்டு அங்கேயே துணி மாற்றிக்கொள்வான்.

இது எல்லாம் அந்தக் காலத்து மாமூல். இதையெல்லாம் ஒருவரும் விகல்பமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் குளிப்பதற்கென்று ஒவ்வொரு வீட்டு புடக்களையிலும் தட்டி வைத்து ஒரு மறைப்பு செய்திருப்பார்கள். பெண்கள் அங்கு அவர்களுக்கு நேரம் இருக்கும்போது குளித்துக் கொள்வார்கள். அன்றாடம் குளியல், காலையில் எழுந்தவுடன் குளியல், சோப்பு, ஷாம்பு குளியல் என்பதெல்லாம் நவயுக நாகரிகம். அந்தக் காலத்தில் ராஜாக்கள் அரண்மனையில் இப்படி நடந்திருக்கலாம். சாதாரண மனிதனுக்குத் தெரியாதவை இவைகள்.

இன்று நகரங்களிலும் கிராமங்களிலும் குளியலறை இல்லாத வீடுகள் இல்லை. குளியலறை என்றால் இன்றும் பெரும்பாலானோர் நினைப்பது, நான்கு சுவர்களும் ஒரு கதவும்தான். இன்றும் பல குளியலறைகளில் குளிக்கப் போனால் துண்டைப் போடுவதற்கு ஒன்றும் இருக்காது. குளியலறைக்கதவின் மேல் போட்டு விட்டுத்தான் குளிக்கவேண்டியிருக்கும். அதுவும் ஒரு வகையில் நல்ல ஏற்பாடுதான், ஏனென்றால் குளியலறைக்கு உட்புறம் தாட்பாள் போடும் வசதி இருக்காது. கதவின் மேல் துண்டு இருந்தால் உள்புறம் ஆள் இருக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

குளியலறையில் வெளிக்குப் போகும் வசதியை அமைப்பது இன்றும் பலருக்கு ஒத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு வீட்டை விட்டு வெளியில் தனியாக ஒரு அறை கட்டியிருப்பார்கள். அதை நவீன முறையில் அவரவர்களுக்குத் தோன்றின மாதிரி அமைத்திருப்பார்கள். அந்த அறை எப்படி இருக்கும் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் பழக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய நவீன குளியலறையைப் பார்த்தால் "பணக்கொழுப்பைப் பார்" என்றுதான் சொல்லத்தோன்றும். இன்றைய நாகரிக உலகில் குளியலறைக்கு சில லட்சங்கள் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. ஆனால் அப்படி பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய குளியலறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் கொடுமையை அமெரிக்காவில் வாழும் நம் ஆட்கள், அவர்கள் வீட்டிற்கு இந்தியாவில் இருந்து விருந்தாளிகள் வரும்போது தவறாமல் அனுபவித்திருப்பார்கள்.

இந்த பிரச்சினை உலகளாவிய ஒன்று. ஆகவே குளியலறையை எவ்வாறு அமைக்கவேண்டும், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். ஒரே பதிவில் சொல்ல முடியாதாகையால் தொடர் பதிவுகளாக எழுதுகிறேன். ஏற்கனவே குளியலறை உபயோகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த குறிப்புகள் தேவையில்லை. தெரியாதவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்தத் தொடர்.