வெள்ளி, 5 ஏப்ரல், 2013

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.