சனி, 13 ஏப்ரல், 2013

சில வில்லங்கமான எண்ணங்கள்



1.   ஒரு மனிதனின் பலமும் பலவீனமும்.


ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலமும் பலகீனமும் இருக்கும். நான் இந்த விதிக்கு விதி விலக்கல்ல. என்னுடைய பலமும் பலகீனமும் ஒன்றே. அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன். இது எனக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பல நண்பர்களை எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.

என்னால் இந்த குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணம் இது என் மூதாதையர்களிடமிருந்து வழிவழியாய் வந்தது. ஆனாலும் இந்த குணத்தை வைத்துக் கொண்டே தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஓரளவு முன்னேறியிருக்கிறேன். குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். நானும் உடல், மன, பொருளாதார ரீதியில் நன்றாகவே இருக்கிறேன்.

பதிவுலகத்திலும் என்னுடைய இந்த குணத்தின் தாக்குதல்கள் இருக்கின்றன. அதை வைத்துக் கொண்டே ஓரளவு நண்பர்களையும், என் கருத்தை எதிர்ப்பவர்களையும் சம்பாதித்திருக்கிறேன்.

என்னுடைய மன நலத்திற்காகத்தான் இந்த பதிவுலகில் பிரவேசித்தேன். கம்ப்யூட்டரிலும் பதிவுலகத்திலும் மாறி வரும் மாற்றங்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஈடு கொடுத்து வருகிறேன். ஆனாலும் சமீப காலமாக என்னால் முன் போல் இணையத்தில் வலம் வரமுடிவதில்லை. ஏதோ பதிவுகளை ஒருவாறு ஒப்பேற்றி வருகிறேனே தவிர, மற்ற பதிவுகளுக்கு சென்று முழுவதும் படித்து, பின்னூட்டம் போட முடிவதில்லை.

சில பதிவுகளைப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போட முடிவதில்லை. இது என்னுடைய ஒரு பெரிய பலகீனம்தான். இந்த குறைக்காக மக்கள் என்னை பொறுத்துக்கொள்ளவேண்டும்.
பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அது தேவையுமில்லை. எதிர்மறை கருத்துக்களை என் பார்வையில் பார்த்து, அவைகளுக்கு காரசாரமாய் பதில் கொடுத்திருக்கிறேன். என் கருத்துக்களில் தவறு இருந்தால் ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறெங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன். என் பதிவில் ஏதாவது சிந்திக்க விஷயம் இருந்தால் படியுங்கள். கருத்து வேறுபாடு இருந்தால் பின்னூட்டம் போடுங்கள். என் கருத்துகளைத் திட்டுங்கள். இது பொது வெளி. என்னுடைய இயலாமை காரணமாக உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாவிட்டால் வருந்த வேண்டாம். அதற்காக என்னை பொறுக்கவேண்டும். 

   2. ஈழம் பற்றி யாரும் எதுவும் பேசலாம்.


சில சமாச்சாரங்கள் காலத்தால் அழியாவரம் பெற்றவை. சில வீடுகளில் பெரிசுகள் தாங்கள் புருஷனோடு வாழ்ந்த காலத்தை அவ்வப்போது நினைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள். புருஷன் போய்ச்சேர்ந்து நாப்பது ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்.

அந்த மாதிரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த சப்ஜெக்ட் கிடைக்காவிட்டால் ஈழத்தை கையிலெடுத்துக் கொள்வார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலானோருக்கு ஈழப் பிரச்சினையின் உண்மை நிலை என்னவென்றே தெரியாது. ஆனாலும் தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கோஷமிடுவார்கள்.

ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே இன்னும் ஒருமனதாக முடிவு செய்யவில்லை. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளோ தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

ஆகமொத்தம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேச, போராட இந்த சப்ஜெக்ட் கைகொடுக்கும்.


3.   இந்தியாவை நல்ல நாடாக்குவது எப்படி?


ஏண்டா, கல்யாணம் பண்ணிக்கலே என்று ஒருத்தன் அடுத்தவனைப் பார்த்துக் கேட்டானாம். அதற்கு அவன், சரி நீயே பொண்டாட்டியா இருந்துக்கோயேன் அப்படீன்னானாம்.

அந்த மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் விடிவு பிறக்காதா அப்படீங்கற ஆதங்கத்தில எதாச்சும் எழுதினா, நம்ம வாசகர்கள். நீதான் மேதாவி ஆச்சுதே. நீயே வழியும் சொல்லு அப்படீன்னு பின்னூட்டம் போடறாங்க. 

எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான். ஒரு பத்து வருடத்திற்கு குழந்தைகள் பிறக்காது. ஜனத்தொகை ஓரளவிற்காவது கட்டுப்படும். கற்பழிப்பு குற்றங்கள் இருக்காது.

ஆனால் இதைச் சொன்னா என்னை துவைத்து காயப்போட்டு விடுவார்கள். எனக்கெதற்கு வம்பு?