ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கனம் பொருந்திய சர்க்கார் வழிமுறைகள்



Penny wise, Pound foolish

இந்த ஆங்கில பழமொழி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். “கடுகு போறதைப் பாத்துட்டு பூசனிக்காயை கோட்டை விட்டானாம்” என்பது ஏறக்குறைய இந்தப் பழமொழிக்கு சரியான தமிழ் பழிமொழி.
நமது அரசாங்க சட்டதிட்டங்கள் இந்த பழமொழிகளை நிரூபிக்கவே உண்டானவை. நான் சர்வீசில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

“சர்க்கார்” வேலைகள் காகிதத்தால்தான் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பேப்பரும் பேப்பர் சம்பந்தமான பொருட்களும் இல்லாவிட்டால் சர்க்கார் வேலை ஸ்தம்பித்துவிடும். அந்தக் காலத்து சென்னை ராஜதானியின் விஸ்தீரணம் அநேகருக்குத் தெரியாது. ஆந்திராவிலுள்ள விஜயநகரத்திலிருந்து இன்றைய கர்னாடக மாநிலம் மங்களூர் வரை பரந்திருந்தது. ஏறக்குறைய அண்ணா கனவு கண்ட திராவிட நாடு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ராஜதானியில் எவ்வளவு அரசு அலுவலகங்கள் இருந்திருக்கும்? அவைகளுக்கு பேப்பர் சம்பந்தமான பொருட்கள் எவ்வளவு தேவைப்பட்டிருக்கும்? இதை அந்தந்த ஆபீஸ்காரர்களே உள்ளூரில் வாங்கி உபயோகப்படுத்தட்டும் என்று விட்டிருக்கலாம். ஆனால் அப்படி தலைக்குத்தலை நாட்டாண்மை பண்ண விட்டால் தலைநகரிலிருக்கும் தலைமை ஆபீசர்களை இந்த குட்டி தேவதைகள் மதிக்குமா?

ஆகவே ஒரு அதி புத்திசிகாமணி என்ன செய்தான் என்றால், ராஜதானி முழுவதும் இவ்வளவு அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு வருடத்திற்கு இவ்வளவு காகிதமும், காகிதம் சம்பந்தமான பொருட்களும் தேவைப்படுகின்றன. அவைகளை மொத்தமாக, தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கினால் விலை சலீசாக இருக்கும். இங்கு தலைநகரில் அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு, அந்தந்த அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது அனுப்பி விடலாம். மேன்மை தங்கிய சர்க்காருக்கு இவ்வளவு பணம் மிச்சமாகும் என்று கணக்குப்போட்டு ஒரு திட்டம் தீட்டி, அதை அந்தக் காலத்து (நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்) தலைமை அலுவலருக்கு (கவர்னர்) அனுப்பினான்.

அவரும் இதைப் பார்த்து, “பேஷ், பேஷ், நல்ல யோசனையாயிருக்கிறது, உடனடியாக அமுல்படுத்துங்கள்” என்று உத்திரவு போட்டுவிட்டார். இப்படித்தான் Controller of Stationery and Printing என்ற அரசுத்துறை உருவாகியது. இதன் முக்கிய வேலை, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான காகிதம் மற்றும் காகித சம்பந்தமான பொருட்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு மற்ற இடங்களில் இருக்கும் அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை விநியோகிப்பது.

திட்டம் அருமையான திட்டம்தான். நடைமுறைப்படுத்தும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. நாளாவட்டத்தில் இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க பல சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள். அதில் முக்கியமானது, அரசு அலுவலகங்கள் வருடத்திற்கு ஒரு முறைதான் தங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கு கேட்பு (Indent) அனுப்பலாம். இதனால் தலைமை அலுவலகம் மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று ஒரு சட்டம் வகுக்கப்பட்டது. அதாவது தலைமை அலுவலகத்தில் வேலைப்பளுவை கணிசமாகக் குறைத்துவிட்டார்கள்.

இது தவிர, அலுவலகங்களில் அடிக்கடி உபயோகமாகும் கடிதங்களை வகைப் படுத்தி, அவைகளை படிவம் (Form) வடிவில் முறைப்படுத்ததி வைத்துக்கொண்டால் அலுவலகங்களில் வேலை கணிசமாகக் குறையும் என்று கண்டுபிடித்து அந்த மாதிரி படிவங்கள் தயார் செய்தார்கள். இந்த மாதிரி படிவங்கள் நூற்றுக்கணக்கில் பெருகவே, அவைகளை சடுதியாக அடையாளம் காண, அவைகளுக்கு நெம்பர்கள் கொடுத்தார்கள்.

கிளை அலுவலகங்கள் இத்தனாம் நெம்பர் படிவம் இவ்வளவு எண்ணிக்கை தேவை என்றால், அவ்வளவு எண்ணிக்கையில் படிவங்கள் அனுப்புவார்கள். நாளாவட்டத்தில் புது படிவங்கள் உருவாகின, பல பழைய படிவங்களுக்குத் தேவையில்லாமல் போயின. இதனால் படிவங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்கள் தாறுமாறாக ஆகிவிட்டன. இதை ஒழுங்குபடுத்துவதற்காக அனைத்து படிவங்களுக்கும் புது எண்கள் கொடுக்கப்பட்டன. ஒரு ஜாக்கிரதைக்காக பழைய எண்களையும் வைத்திருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு படிவத்திலும் பழைய எண், புது எண் ஆகிய இரண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.

நான் வேலை பார்த்த அலுவலகத்தில் இரண்டு படிவங்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு படிவங்களும் ஒவ்வொரு காகிதத்தில் அச்சிடப்பட்டவை. ஒவ்வொன்றிலும் 200 பிரதிகள் தேவைப்பட்டன. அதற்கான கேட்பு படிவத்தை அனுப்பியிருந்தோம். அந்தக் கேட்பு மனுவில் படிவ எண் (புதிது) குறிப்பிட்டு அனுப்பியிருந்தோம்.

அந்த எண்களைக் கொண்ட பழைய படிவம் 200 தாள்களைக்கொண்ட ஒரு பெரிய லெட்ஜர். எங்கள் கேட்பு படிவத்தை நிர்வகித்த ஒரு புத்திசாலி, நாங்கள் கொடுத்த புது எண் படிவத்திற்கு பதிலாக, பழைய எண் படிவத்தை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டான். அதாவது நாங்கள் கேட்ட ஒரு தாள் படிவம் 200+200 க்கு பதிலாக 200 தாள்கள் கொண்ட லெட்ஜர்கள் 200 + 200 எண்ணிக்கை அனுப்பிவிட்டான்.

பத்துப் பத்து லெட்ஜர்களை ஒரு பண்டிலாக கட்டி, மொத்தம் 40 பண்டில்களை ரயில்வே பார்சலில் ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த ரசீதை (To Pay) எங்கள் ஆபீசுக்கு அனுப்பி விட்டான். அதாவது பார்சல் சார்ஜ் நாங்கள் கட்டி டெலிவரி எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் மூளையை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அந்த லெட்ஜர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்ன ஆபீசுக்குத் தேவைப்படுமா என்று ஒரு நொடி கூட அவன் சிந்திக்கவில்லை.

இவ்வளவு எண்ணிக்கை பார்சலில் வருமாறு நாம் என்ன பொருட்கள் கேட்டோம் என்று நானும் என் மேல் ஆபீசரும் எங்கள் மூளையைக் கசக்கி யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. ரயில்வே ஸடேஷனிலிருந்து பார்சல்கள் வந்து விட்டன, உடனே டெலிவரி எடுத்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் டெமரேஜ் போடுவோம் என்று போன் பண்ணிவிட்டார்கள்.

சர்க்கார் சட்டம் என்னவென்றால் பார்சல் கட்டணம் எவ்வளவானாலும் அதை அரசுப் பணத்திலிருந்து செலவு செய்யலாம், ஆனால் டெமரேஜ் ஒரு ரூபாய் ஆனாலும் அதை சம்பந்தப்பட்ட அலுவலர் தன் சொந்தப் பணத்திலிருந்துதான் செலவு செய்யவேண்டும். தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு எழுதி, பதில் வருவதற்குள் ஏகப்பட்ட ரூபாய் டெமரேஜ் ஆகிவிடும். ஆகவே அந்தப் பார்சல்களைப் பணம் கட்டி எடுத்து, ஒரு இரட்டை மாட்டுவண்டி வைத்து ஆபீசுக்கு கொண்டு வந்தோம்.

ஒரு பார்சலைப்பிரித்து ஆராய்ந்ததில், படிவ எண் கோளாறினால் இப்படி நடந்திருக்கிறது என்று தெரிந்தது. சரி, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று, நடந்த சமாசாரங்களை எல்லாம் விரிவாக தலைமை அலுவலகத்திற்கு எழுதி, இந்தப் படிவங்கள் எங்களுக்கு உபயோகமில்லாதவை, ஆதலால் அவைகளை திருப்பி அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டோம்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நாங்கள் முதலில் கேட்ட ஒரு தாள் படிவங்களில் 200 + 200 அனுப்பிவிட்டு, அந்த மாறிப்போன படிவங்களை, படிவங்களா அவை, லெட்ஜர்கள், அங்கேயே வைத்திருங்கள், அவைகளை யாராவது கேட்கும்போது உங்களுக்குத் தெரிவிக்கிறோம், அங்கிருந்து நேராக அவர்களுக்குப் பார்சல் செய்து விடுங்கள், இப்போது அவைகளை எங்களுக்குத் திருப்பி அனுப்பினால் வீண் செலவுகள் வரும் என்று பதில் அனுப்பிவிட்டார்கள்.

தலைமை அலுவலகத்தில் ஒரு உத்திரவு போட்டுவிட்டால் அதை நிறைவேற்றத்தான் வேண்டுமே தவிர, அதை எதிர்த்து பதில் கேள்விகள் கேட்கக் கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டம் அந்த்க காலத்தில் அமுலிலிருந்தது. வேறு வழியில்லை. அந்தப் பார்சல்களை குடோனில் ஒரு மூலையில் போட்டுவிட்டு, அதைக் கேட்டு யாராவது கேட்பு மனு அனுப்பமாட்டார்களா என்று சாதக பட்சி மழைக்காக காத்திருப்பது போல் காத்துக்கொண்டிருந்தோம்.

நான் அந்த ஆபீசில் இருந்த மூன்று வருட காலத்தில் ஒரு பயலும் அந்த லெட்ஜர்களைக் கேட்கவில்லை. இப்போது அந்த லெட்ஜர்களை அநேகமாக கரையான்கள் தின்று தீர்த்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படியாக சர்க்கார் பணம் சேமிக்கப்படுகிறது.