சனி, 4 மே, 2013

செலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்


பேராசையே பல சங்கடங்களுக்குக் காரணம் என்று பல அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருந்தாலும், மனிதன் அதற்கு சில சமயங்களில் இடம் கொடுத்து விடுகிறான். அதற்கு உண்டான பலனையும் உடனே அனுபவிக்கிறான்.

==================================================================
3-5-2013 தினத்தந்தி செய்தி

மதுரை திருநகரில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சம்பவம்.

வங்கி முன்பு, அ.தி.மு.க. பிரமுகரிடம் 3 லட்சம் கொள்ளை.

மதுரை, மே 3.

மதுரை திருநகரில் வங்கி முன்பு, ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, நூதனமுறையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. செயலாளர்.

மதுரை திருநகர் 6 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ். நேற்று காலை இவர் திருநகர், சித்ரகலா காலனியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றார். வங்கியில் 3 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, தனது காருக்குத் திரும்பினார்.

காரின் பின் சீட்டில் பணப்பையை வைத்துவிட்டு, காரை எடுப்பதற்காக முன் சீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள், ரோட்டில் 100 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதை காட்டி, "இந்த ரூபாய் உங்களுடையதா பாருங்கள்" என்று கூறினர். அதைப் பார்த்த செல்வராஜ் தனது பணப்பையில் இருந்து சிதறாயிருக்குமோ என்று நினைத்து சிதறிக்கிடந்த மூன்று 100 ரூபாய் தாள்களையும் எடுத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், காரின் பின் சீட்டில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

சிதறிக்கிடந்த பணத்தை எடுத்தபின் காருக்கு வந்த செல்வராஜ், பின் சீட்டில் இருந்த பணப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம மனிதர்கள் கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தனது கவனத்தை திசை திருப்பி, பணப்பையை எடுத்துச்சென்றதை உணர்ந்தார்.

300 ரூபாயை எடுத்து முடிப்பதற்குள் 3 லட்சத்தை இழந்துவிட்டதை நினைத்து திகைத்துப்போனார்.

====================================================================

இந்தச் செய்தியில் எனக்குப் புரியாத ஒரு பாய்ன்ட். நூதனமுறையில் இந்த திருட்டு நடந்தது என்று தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது. இந்த திருட்டில் நூதனம் எங்கே வந்தது? காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே இது.

அடுத்து ஒரு பாய்ன்ட் - இது நல்ல பிசினஸ் மாதிரி தெரிகிறது. ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்.