வியாழன், 25 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு -பாகம் 1


ஆஹா, அடிச்சது ஒரு லாட்டரி பிரைஸ். நம்மையும் (ஒரு பார்மாலிட்டிக்காக தன்மைப் பன்மை உபயோகித்திருக்கிறேன். தன்மைப் பன்மை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் உடனடியாம ஒரு தமிழ் வாத்தியாரைப் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.)  ஒரு பதிவரா மதிச்சு ஸ்ரீராம் ஒரு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டிருக்கார். விடுவோமா வந்த வாய்ப்பை. எல்லோரும் எழுந்து ஓடத் தயாராக இருங்கோ!

1987 ம் வருடம். விவசாயப் பல்கலைக் கழகத்தில் நான் ஒரு ஆராய்ச்சி யூனிட் டைரக்டராகப் பொறுப்பேற்றேன். யூனிவர்சிடி வைஸ்-சேன்சலருக்கு அடுத்த கீழ் பதவி. (பேரு பெத்த பேருதான்.) என்ரூமில் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருந்தது. எனக்கு முன் இருந்தவர் வாங்கிப்போட்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வாஷிங்க் மெஷின் சைசில் இருந்தது.

அப்போதுதான் PC  என்று சொல்லப்படும் Personal Computer கள் மார்க்கெட்டில் வர ஆரம்பித்த காலம். அதற்கு முன் மெய்ன் பிரேம் கம்ப்யூட்டர்கள் என்று சொல்லப்படும் வெள்ளை யானைகள்தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எல்லாம் யானை சைசில் இருக்கும். விலையும் யானை விலைதான். எங்கள் யூனிவர்சிடியில் ஒரு வெள்ளை யானை 20 லட்சம் ரூபாயில் வாங்கி, ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் ஒரு 10 அடி அகலம் 20 அடி நீளமான ரூமுக்கு AC பொறுத்து அதற்குள் வைத்திருந்தார்கள்.

அந்த அறைக்குள் போவதென்றால் கோவிலுக்குள் போவது போல் செருப்பையெல்லாம் கழட்டி வாசலில் வைத்து விட்டுப் போகவேண்டும். அந்தக் கம்ப்யூட்டரை இயக்க ஒரு அசிஸ்டென்ட்டுக்கு ஒரு மாதம் அந்தக் கம்ப்யூட்டர் கம்பெனியே டிரெய்னிங்க் கொடுத்திருந்தது. அந்த ஆளுக்கு ஏகப்பட்ட மரியாதை. தலையில் லேசாக கொம்பு முளைத்திருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். என் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதுவரை கம்ப்யூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர கம்ப்யூட்டரை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆகவே என் ரூமில் இருந்த கம்ப்யூட்டரை ஆசை தீர தொட்டு, தடவி எல்லாம் பார்த்தேன். பக்கத்தில் அந்தக் கம்ப்யூட்டரை உபயோகப் படுத்துவது பற்றிய மேன்யுவல் எல்லாம் இருந்தன. அந்த கம்ப்யூட்டரில் ஹார்டு டிஸ்க் கிடையாது.  A மற்றும் B டிரைவ் என இரண்டு ஸ்லாட்டுகள்தான் இருந்தன.  அப்போது 6 அங்குல விட்டத்தில் பிளாப்பி டிஸ்க் என்று ஒன்று இருக்கும். அதில்தான் கம்ப்யூட்டர் புரொக்ராம்கள் இருக்கும். அதை A டிரைவில் போட்டால் கம்ப்யூட்டர் இயங்கும். B டிரைவில் நாம் தேவைப்பட்ட பைல்களை சேமிக்க ஒரு பிளாங்க் பிளாப்பி டிஸ்க்கைப் போட்டு வேலை செய்யவேண்டும்.

இந்த விவரங்களெல்லாம் பல மாதங்கள் கழித்துத்தான் நான் அறிந்து கொண்டேன். முதலில் எனக்கு ஒன்றும் தெரியாது.

நான் ஒரு பெர்ர்ர்ரிரிரிய அதிகாரியானதால் எனக்குத் தெரியாது என்று எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நான் அந்தப் பதவிக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தவனாதலால் யாரிடமும் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்க முடியாது. மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ் பணிபுரிபவர்கள். என்னைவிட ரேங்க் குறைவானவர்கள். அவர்களிடம் போய் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று கேட்டால் அது பெருத்த அவமானம். அதற்குப் பதிலாக தூக்குப் போட்டு செத்து விடலாம்.

ஆகவே நானே அந்த  மேன்யுவல்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஆபீஸ் நேரத்தில் இதை செய்ய முடியாது. ஏனென்றால் பார்ப்பவர்கள் எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கேவலமாக நினைப்பார்கள். எனவே மாலை 5 மணிக்கு மேல் எல்லோரும் ஆபீசை விட்டுப் போனபிறகு இந்த மேன்யுவல்கள்ப் படிப்பேன்.

பாகம் 2 ல் தொடரும்.