வியாழன், 15 ஆகஸ்ட், 2013

டாக்சியென்றால் எனக்குப் பயம் ?


உலகம் முழுவதும் உள்ள டாக்சிக்காரர்களின் (ஆட்டோக்காரர்களும் இதில் சேர்த்திதான்) பொதுவான ஒரு குணம் என்னவென்றால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு எவ்வளவு சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றித்தான் போவார்கள். உங்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பது அவர்களுக்கு கைவந்த கலை. நீங்கள் எப்பேர்ப்பட்ட ஜகஜாலக் கொம்பனானாலும் உங்கள் கண்ணில் மிளகாய்ப்பொடி போட அவர்களுக்குத் தெரியும்.

இதை இரண்டொரு தடவை நேரடியாக அனுபவித்ததின் பலன்தான் எனக்கு டாக்சிக்காரர்களின் பேரில் ஏற்பட்ட பயம். அவர்களுடைய அனுபவத்தின் காரணமாக ஊருக்குப் புதியவர்களை உடனே இனம் கண்டு கொள்வார்கள். நாம் போக வேண்டிய இடம் பக்கத்தில் இருந்தால் "அங்க எல்லாம் நம்ம வண்டி வராது சார்" என்பார்கள்.

ஒரு டாக்சிக்காரனிடம் பேரம் பேசி படியாவிட்டால், அடுத்து இருக்கும் எல்லா டாக்சிக்காரன்களும் முதல் டாக்சிக்காரன் எவ்வளவு கேட்டான் என்பார்கள். நாம் உண்மையைத்தானே சொல்வோம். இளிச்சவாயனுக்கு அதுதானே அடையாளம். அந்த இரண்டாவது டாக்சிக்காரன் முதல் டாக்சிக்காரன் கேட்டதை விட அதிகம் கேட்பான். என்னப்பா, முதல் டாக்சிக்காரனை விட அதிகம் கேட்கிறாயே என்றால், அப்போ அந்த டாக்சியிலேயே போங்கள் என்று சொல்வான்.

இது டாக்சிக்காரர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம். ஒரு டாக்சிக்காரனிடம் நீங்கள் பேசி விட்டால் அடுத்த டாக்சிக்காரன் ஒருவனும் உங்களுக்கு வரமாட்டான். சில இடங்களில் இந்த டாக்சிக்காரன்கள் புரோக்கர் வைத்திருப்பார்கள். அவர்கள் நம்மிடம் நைசாகப் பேசி ஒரு ஓட்டை டாக்சிக்குக் கூட்டிப்போவான். இவர்களிடம் சிக்கினால் மீளமுடியாது.

எப்படியோ ஒரு டாக்சியில் பேசி ஏறி விட்டீர்களானால் அவன் தன் இஷ்டத்திற்குத்தான் சுற்றிக்கொண்டு போவான். நீங்கள் ஓரிரு தடவை அங்கு சென்ற பழக்கத்தினால் இந்த வழியில் போகலாமே என்றால் சார், அந்த ரோட்டை மெட்ரோவிற்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள் சார் என்பான். எப்படியோ நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு வந்த பிறகு மீட்டரைப் பார்த்தால் வழக்கமாக ஆவதைப் போன்று இரண்டு மடங்கு ஆகியிருக்கும். பேசாமல் கோடுத்தீர்களானால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் சென்னை பாஷையில் அர்ச்சனை வாங்கவேண்டி இருக்கும்.

கோயமுத்தூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் விதமே தனி. ரயில்வே ஸ்டேஷனில் எப்படியோ பேரம் படிந்து ஏறிவிடுவார்கள். அவர்கள் கையில் அவர்கள் போகவேண்டிய இடத்தின் விலாசம் தெளிவாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டோ டிரைவர் முக்கால்வாசி தூரம் வந்த பிறகு அவன் அந்த ஊருக்கே புதிசு மாதிரி டிராமா போடுவான். போகவேண்டிய இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தாண்டிப்போய் ரோட்டில் போகும் யாராவது இடம் விசாரிப்பான். அந்த இடம் மிகவும் பிரபலமான இடமாயிருக்கும். ஆனால் அவன் ஒன்றும் தெரியாதமாதிரி கமுக்கமாக இருப்பான்.

இப்படி அவர்களை தெற்கும் வடக்குமாக அலைக் கழித்து கடைசியில் அவர்களைக் கொண்டு போய் சேரவேண்டுய விலாசத்தில் சேர்த்துவான். வந்தவர்களும் ஆஹா, டிரைவர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டார் என்று உருகிப்போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

நான் எந்த ஊருக்குப் போவதாயிருந்தாலும் அந்த ஊரிலுள்ள டவுன் பஸ் ரூட்களை நன்கு விசாரித்து அறிந்து கொள்வேன். மும்பாய், டில்லி, கல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏர் போர்ட்டிலிருந்து டவுன் வரைக்கும் வர பஸ் ரூட்கள் நன்கு தெரியும். இது வரை அங்கெல்லாம் நான் டாக்சி வைத்ததே கிடையாது. பஸ்சில்தான் போவேன். டவுனுக்குள் வந்த பிறகு போகவேண்டிய இடத்திற்கு ஆட்டோ வைத்துக் கொள்வேன்.

உலக முழுவதும் உள்ள டாக்சிக்காரர்கள் ஒரே மாதிரி இருப்பதுதான் எட்டாவது உலக அதிசயம்.