திங்கள், 19 ஆகஸ்ட், 2013

புலம்பல் எங்களது பிறப்புரிமை.


வீட்டில் வயதானவர்கள் இருந்தால் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள். "அந்தக் காலத்தில ரூபாய்க்கு மூன்று படி அரிசி வித்தப்போ" என்று ஆரம்பித்தால் நான்-ஸ்டாப்பாக மூன்று மணி நேரம் அந்த பிரசங்கம் ஓடும்.

வயதானவர்கள் மட்டும்தான் புலம்புகிறார்கள். இளம் வயதில் புலம்புவர்கள் மிகவும் அரிது. ஏன் இப்படி வயதானவர்கள் மட்டும் புலம்புகிறார்கள் என்று (எனக்கும் வயதாகிவிட்டதால்) ஒரு ஆராய்ச்சி செய்தேன். அதில் கண்டு பிடித்த உண்மைகளை உங்களுக்குச் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. அதனால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என்ற தத்துவப்படி உங்களையும் வாதிக்கிறேன்.

இளம் வயதுக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். தவிர குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வேறு எதிலும் சிந்தனை இருக்காது.

வயதாகி ரிடையர் ஆகி வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனது வேலை செய்து கொண்டேயிருக்கும். அப்போது பேசுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். மனதின் எண்ணங்களை செயல்படுத்தும் தென்பும் போயிருக்கும். வாய் மட்டும் வேலை செய்யும். அப்போது நிகழ்வதுதான் இந்தப் புலம்பல்.

மனதின் எண்ண ஓட்டங்களை வாய் வழியாக வெளியில் வருகின்றன. மற்றவர்கள் இதைக்கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இந்தப் புலம்பல் நடந்துகொண்டே இருக்கும்.

இரண்டாவது, அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை. எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. ஒரு பயலும் என்னிடம் யோசனை கேட்க மாட்டேன் என்கிறானே என்பதுதான் பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கும். காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

இன்று மூன்று வயதுக் குழந்தை இன்டர்நெட்டில் விளையாடுகிறது. செல் போன் பேசுகிறது. விமானத்தில் பயணிக்கிறது. இந்த கிழங்கள் எல்லாம் தங்கள் இளம் வயதில் விமானம் பறப்பதை வாயில் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்த கேஸ்கள். பேரன் விமானத்தில் போனதைப் பற்றிப் பேசினால், ஆஹா, நாங்கள் பார்க்காத விமானமா, ராமன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக்கும் என்று ஆரம்பிப்பார்கள். பேரன் அப்போதே ஓடிப்போய் விட்டிருப்பான். ஆனாலும் இவர்கள் அவன் முன்னால் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு தங்கள் பிரலாபத்தை இரண்டு மணி நேரம் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கேஸ்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்தில் கிராமபோன் மெஷினில் ரெக்கார்டைப் போட்ட மாதிரி, நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.