சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

கடந்த செப்டம்பர் 1 ந்தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு, மகாநாடு, திருவிழா நடந்தது அனைத்து பதிவர்களும் அறிந்ததே. இந்த நிகழ்வினால் என்ன பயன் விளைந்தது என்று பலருக்கு ஐயப்பாடு இருக்கிறது.

பதிவர் சந்திப்பினால் பின் வரும் பயன்கள் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்.

1. புதிய பதிவுலக நண்பர்கள் கிடைப்பார்கள்.

2. பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

3. புது பதிவுலக உத்திகளை அறிமுகப்படுத்துவார்கள்.

4. நல்ல தியான யோக அனுபவம் கிட்டும்.

5. மதியம் ஒரு விருந்து கிடைக்கும்.

6. ஒரு நான்கைந்து பதிவுகளுக்கான மேட்டர் தேத்தலாம்.

இந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறின. ஆனால் எல்லா பதிவர்களுக்கும் எல்லா நோக்கங்களும் நிறைவேறியிருக்காது.

என்னைப் பொருத்த வரை சில புதிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. பல பழைய பதிவர்களை சந்திக்க முடிந்தது.

சந்தித்த புதிய பதிவர்கள்:

ரஞ்சனி நாராயணன்.

வெளங்காதவன்

உமாமகேஸ்வரி

மாதங்கி மாலி.

சுப்புத் தாத்தா

கேபிள் சங்கர்

சேட்டைக்காரன்

முருகானந்தம் (கைலாய யாத்திரை)

ஆரூர் மூனா செந்தில்

சந்தித்த பழைய பதிவர்கள்.

புலவர் ராமானுஜம்

வெங்கட் நாகராஜ்

ஜாக்கி சேகர்

சதீஷ் சங்கவி (எங்க ஊரு)

திண்டுக்கல் தனபாலன்

ஜோதிஜி

தருமி

இந்த லிஸ்ட்டில் பல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த அறிமுகங்களில் எனக்கு ஒரு பெரிய சங்கடம் உண்டு. மனித மூளையில் இரு பகுதிகள் உண்டு என்பதும் அதில் ஒரு பகுதியில்தான் இந்த மனித முகங்களையும் பெயர்களையும் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு என்றும் படித்திருக்கிறேன். என்னுடைய மூளையில் இந்தப் பகுதி ரொம்ப வீக். ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.

இது புதிதாகப் பார்த்தவரைப் பற்றிய அனுபவம். வரவர நெடுநாள் பழகியவரின் பெயர் கூட உடனே நினைவிற்கு வருவதில்லை. இது வயதானதின் கோளாறு. இதில் கூடுதல் வம்பு என்னவென்றால், பதிவர்கள் ஒவ்வொருவரும் (சிலரைத்தவிர) எல்லோரும் ஒவ்வொரு புனை பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் தளங்களின் பெயர்கள். பிறகு அவர்களின் நிஜப் பெயர்கள். அவர்களின் ஊர், தொழில். அவர்களின் முகங்கள். இத்தனை சமாசாரங்களையும் சந்தித்து ஓரிரு நிமிடங்களில் மனதில் பதிய வைத்து, பின்பு நினைவு கூர்வது என்ன பெரிய பிரம்ம வித்தை.

சைனாக்கார்ர்கள், ஜப்பான்காரர்கள் இவர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். உங்களில் பலரும் இந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள். அந்த ஊரில் ஒருவருக்கொருவர் எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமே. இப்போது என்ன ஆகிவிட்டதென்றால், இன்றைய இளைஞர்களும் அதேபோல் ஒன்றுபோல் தெரிகிறார்கள். ஒரேமாதிரி தாடி, ஒரே மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டி ஷர்ட்டும்.

இவர்களை வித்தியாசப் படுத்தி அடையாளம் கண்டு கொள்ள என்னால் முடிவதில்லை. அதிலும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதுவும் வயசானதினால்தான் என்று நினைக்கிறேன்.

ஆகவே இப்படித்தான் என்னுடைய பதிவர்கள் சந்திப்பு நடந்தது.

பதிவுலகத்தில் புது உத்திகளை ஏதாவது அறிமுகப் படுத்துவார்களா என்று பார்த்தேன். யாரும் அதில் ஆர்வம் காட்டின மாதிரி தெரியவில்லை.

தியானயோக வகுப்புகள் எல்லாம் முன்தினம் இரவே முடிந்து விட்டதாகக் கூறி விட்டார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த பதிவர் சந்திப்புக்கு இரண்டு நாள் முன்னதாகவே போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் ரசிக்க முடிந்தது மதிய விருந்துதான். அப்படியொரு பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. இருப்பதிலேயே உயர்ந்த ரக பாசுமதி அரிசியில் மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருந்த பிரியாணி. வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யவில்லை. விழாக்குழுவினருக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

அநேகமாக எல்லாப் பதிவர்களும் தலா நான்கு பதிவுகளாவது போட்டோ விட்டார்கள். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவு போட்டுவிட்டார்கள். இன்னும் போடுவார்கள். ஆகவே பதிவுலகின் நோக்கமே பதிவு போடுவதுதானே. அந்த நோக்கம் மிக இனிதாக நிறைவேறியது என்பது ஒரு போற்றத்தக்க விஷயம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருப்போம்.