வியாழன், 19 செப்டம்பர், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் குறைகிறது?


நான் பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும் ஓரளவிற்கு பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலத்தில் மிகவும் குறைந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏன், எதனால் என்பது பலருக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் செழிப்பாக இருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறோம்? அந்தக் குடும்பத்தில் எல்லோரும் உழைக்கிறார்கள். வருமானம் ஈட்டுகிறார்கள். சிக்கனமாகச் செலவு செய்து மிச்சம் பிடிக்கிறார்கள். பகட்டுக்காக எதுவும் செய்வதில்லை. மீதியாகும் பணத்தை நல்ல முதலீடுகளில் போடுகிறார்கள். கடன் எதுவுமில்லை.

இன்னொரு குடும்பம். பரம்பரைப் பணக்காரர்கள். ஆனால் இப்போது அவர்கள் சொத்துகள் பலவாறாகச் சிதறிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து வருமானம் மிகக் குறைவாகவே வருகிறது. குடும்பத்தில் யாரும் வேலைக்குப் போவதில்லை. இன்னொருவரிடம் வேலைக்குப் போய் கை நீட்டி சம்பளம் வாங்குவது கேவலம் என்ற எண்ணம் கொண்டவர்கள். பரம்பரை பகட்டை விடமுடியவில்லை. கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

இதில் எந்தக் குடும்பம் உயர்ந்த குடும்பம்? நான் சொல்லவேண்டியதில்லை.

நாடுகளும் இப்படித்தான். நாட்டில் இருக்கும் எல்லோரும் உழைக்கவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். அப்படி பெருகிய உற்பத்தியை வெளிநாடுகளில் சந்தைப் படுத்த வேண்டும். அந்நிய செலாவணி சேரவேண்டும். உள் நாட்டில் கட்டமைப்புகள் வலுவாக இருக்கவேண்டும். தனி மனிதன் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் தங்களுடைய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும். செல்வம் வீண் போகக் கூடாது. அதை எப்பொழுதும் பயனுள்ள வழிகளிலேயே பயன்படுத்த வேண்டும்.

கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் உபயோகிக்கும் பொருளின் மதிப்பை உணர்ந்து உபயோகிக்கவேண்டும்.

இது எப்படி சாத்தியமாகும்? அந்தந்த நாட்டின் அரசுக் கொள்கைகளே இந்த நடைமுறையை சாத்தியமாக்கும். நம் நாட்டின் அரசாங்க கொள்கைகள் எதை சாதிக்கின்றன? இலவசங்கள் மூலம் சோம்பேறிகளை வளர்க்கிறது. லஞ்சத்தின் மூலம் செல்வம் வீணாகப் போக அனுமதிக்கிறது. கடன் வாங்கி ஆடம்பரம் செய்கிறோம். நாடு முன்னேறுவதற்கான எந்த திட்டத்தையும் ஒழுங்காக நிர்வகிப்பதில்லை.

நாடு சறுக்கிக்கொண்டு இருக்கிறது என்று உலக நாடுகளுக்கெல்லாம் தெரிகிறது. அப்புறம் நம் நாட்டிற்கு உலக சந்தையில் என்ன மரியாதை இருக்கும்? ரூபாயின் மதிப்பு குறையாமல் என்ன செய்யும்?