ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.
இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.
என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.
இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.
முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.
இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.
நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.
இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.
தொடரும்...