திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.