திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.