ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒரு அவசர (அவசிய) பதிவு

                                             
என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB  கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..

என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.

ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)

இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.