வெள்ளி, 18 ஜூலை, 2014

மாவுச்சத்து சக்தியாக மாறும் அதிசயம்


இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.

அனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.


சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.


சர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி?

(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.)


மாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது "உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.


இந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும்? ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக "கிட்னி பெயிலியர்" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.


இரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம். 

என்ன, இந்த ஆள்  இந்தப் பதிவை 
டிவிக்களில் வரும் மெகாத் தொடர்கள் போல் நீட்டிக்கொண்டு போகிறானே என்று சலிப்படைய வேண்டாம். ஒரு பதிவில் ஒரு செய்தியை மட்டும் கொடுத்தால்தான் அது மனதில் நன்றாகப் பதியும். அதனால்தான் இந்த ஜவ்வு மிட்டாய் விவகாரம்.