வெள்ளி, 10 அக்டோபர், 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மனித இயல்புகளை துல்லியமாக படம் பிடித்துக்காட்டும் இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.


விமர்சனம்

மனித மனத்தின் அவலங்களை போட்டோ பிடித்தது போல் காட்டியிருக்கும் இக்கதை எல்லோருடைய மனதிலும் நீண்ட நாள் இடம் பிடித்துக் கொள்ளும்.

வெளித்தோற்றங்கள் ஒருவரின் குணங்களை பிரதிபலிக்கிறது என்கிற ஆழ்ந்த நம்பிக்கையில் நாம் வாழ்கிறோம். புறத்தோற்றத்தைத் தாண்டி உள் மனதின் அழகைக் காண நம் அனுபவ அறிவு நம்மை அனுமதிப்பதில்லை. அதுவே மனிதனின் பெரிய குறைபாடு.

சிறு குழந்தைகளுக்கு அத்தகைய குணங்கள் இன்னும் வரவில்லை என்பதை மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் பெரியவர்களானதும் இந்த கபடமற்ற தன்மை மறைந்து போகுமோ என்னமோ?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் ரயில் பயணம் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக பட்டாபி-பங்கஜம் தம்பதியினர் மூலமாக அனுபவிக்கிறோம். நீண்ட தூரப் பயணத்தில் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை பட்டாபி பாதுகாக்கும் விதம் எல்லோரும் செய்யும் முறையே.

ஆனால் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பொருட்களை எண்ணி கொண்டு போனாலும் தவறு ஏற்படுவது உண்டு என்பதை காண்கிறோம். ஆனால் அந்தத் தவறு சக மனிதரின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் விளைந்தது என்பதை அழகாக கதாசிரியர் சுட்டிக் காண்பிக்கிறார்.

அந்த தவறு அவர்கள் வெறுத்த ஒருவராலேயே நிவர்த்திக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியை வார்த்தைகளால் அளவிட முடியாது. அதற்கு பிராயச்சித்தமாக அவர்கள் செய்யும் தானம் மனதில் வெறுப்பைத்தான் உண்டு பண்ணுகிறது. மனித மனம் நொடியில் எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை நம்மால் எளிதாக ஜீரணம் செய்ய முடியவில்லை.

இந்தக் கதையை பல நாட்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். மனதை விட்டு அகலவில்லை. என்றும் சிரஞ்சீவியாக வாழும் கதைகளில் இதுவும் ஒன்று.

பழனி.கந்தசாமி

http://swamysmusings.blogspot.com