வெள்ளி, 5 டிசம்பர், 2014

புது வருட புது முட்டாள்


பல சமயங்களில் பலரும் முட்டாள்கள் ஆவதுண்டு. தினப் பத்திரிகை செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான கருத்துகளை மனதில் பதியவைத்துக் கொள்வோம். அதே மாதிரி அடுத்தவருடன் பேசும்போது அவர் சொல்லும் வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் வேண்டாத முடிவுகளுக்கு வருவோம். கடிதங்களைச் சரியாகப் படிக்காமல் தவறான செயல்களைச் செய்வோம்.

முக்கியமாக தேதிகளை சரியாக மனதில் பதிய வைப்பதில்லை. அதுவும் புது வருடம் பிறந்து பல நாள் ஆன பின்பும் கையெழுத்து போடும்போது பழைய வருடத்தையே குறிப்பிடுவோம். பலரும் இவ்வாறான தவறுகளினால் முட்டாள்கள் ஆவதுண்டு. சிலர் தக்க சமயத்தில் தங்கள் முட்டாள்தனத்திலிருந்து விடுபடுவார்கள். சிலரோ அதே தவறான புரிதலோடு வாழ்வார்கள்.

நானும் சமீபத்தில் இவ்வாறு முட்டாள் ஆனேன். ஆனால் தக்க சமயத்தில் விழித்துக்கொண்டேன்.

நான் இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி வருவது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு பதிவிற்கு திரு சீனா ஐயா இட்டிருந்த மறு மொழியைப் பாருங்கள்.

அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான். செவ்வாய் மட்டும் இரண்டு பதிவுகள் வரும். பர்வாய் இல்லை.
சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா 

இதற்கு நான் போட்ட பதில்:

மிக்க நன்றி, சீனா ஐயா.
அடுத்து இன்னொரு பதிலும் போட்டேன்.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

இந்த வரிகள் முதலில் என் மனதில் சரியாகப் பதிவாகவில்லை. இந்த அழைப்பு உண்மையாகவா? இந்த வார வலைச்சரப் பதிவுகள் முடிவடைந்த பிறகும் உங்கள் எண்ணம் இதுவாகவே இருந்தால் உறுதி செய்யவும். நான் என்றும் உங்கள் அன்பிற்குக் கட்டுப்பட்டவன்.

அன்புடன், பழனி.கந்தசாமி.
இந்த பரஸ்பர செய்திகளில் உள்ள முரண்பாடு புரிகிறதா? எனக்கும் முதலில் புரியவில்லை.
இதற்கு தமிழன்பன் இட்ட பதிலில் இருந்துதான் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது போல என்று மனதிற்குப் பட்டது.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!
இன்றுதான் அகஸ்மாத்தாக இந்த பின்னூட்டத்தைப் பார்த்தும்தான் என் மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ஆஹா நாம் முட்டாளாகி விட்டோமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.
தமிழன்பனுக்கு இவ்வாறு பதில் போட்டேன்.
//தமிழன்பன்Tue Dec 02, 03:39:00 AM
"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!//

தமிழன்பனின் பின்னூட்டத்திற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது.

தமிழன்பன், என் மூளை நிஜமாகவே துருப்பிடித்துத்தான் போய்விட்டது. இப்படித்தான் செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான முடிவுகள் எடுத்து விடுகிறோம். இதற்கு திரு. சீனா என்ன செய்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பர்களே, நான் எப்படி முட்டாள் ஆனேன் என்று புரிகிறதா?
ஆனாலும் என் நல்ல காலம் அதில் இருந்து விடுபட்டு விட்டேன்.