சனி, 10 ஜனவரி, 2015

O Controversy, is thy name Palani.Kandaswamy?

                                   
                                 

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததிற்கு வருந்துகிறேன். ஆனால் என் தற்கால நிலையை வர்ணிப்பதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தைகள் எனக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. மேட்டரும் காப்பியும் சூடாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதனால்தான் இந்தப் பதிவு.

இன்றைக்கு நான்தான் தமிழ் பதிவுலகில் பிரபல பதிவர், இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருக்குமாயின் அவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மாற்றுக் கருத்துகள் எதுவாகினும் அவைகள் மட்டுறுத்தப்படாது என்று உறுதி அளிக்கிறேன்.

"குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை" என்ற பதிவை எழுதினாலும் எழுதினேன். மக்கள் பிலுபிலுவென்று என்னைப் பிடுங்கித் தின்கிறார்கள். ஒரு பதிவைப் பற்றி பல பதிவர்கள் தங்கள் தளங்களில் அலசுவது புதிதல்ல.

ஆனால் அத்தகைய பதிவுகள் சமீப காலமாக பதிவுலகில் எழுதப்படவில்லை. அதனால் தமிழ் பதிவுலகமே சோர்ந்து இருந்தது. என்னுடைய பதிவு அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறது. இதனால் சோம்பிக்கிடந்த பதிவுலகம் ஓரளவிற்கு விறுவிறுப்பாகியுள்ளது. இதற்குக் காரணமான எனக்கு விருது வழங்கும் வள்ளல்கள் தங்கள் விருதுகளை தாராள மனதுடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அலசப்படும் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரிந்ததென்றால் பதிவுகளில் சொல்லப்படும் கருத்துகள் அவரவர்கள் சொந்தக் கருத்தாக இருக்கவேண்டும். அதற்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் பலதரமான பின்னூட்டங்கள் வரும். அந்தப் பின்னூட்ங்களின் முக்கிய நோக்கம் அந்தப் பதிவரின் வாயில் வார்த்தைகளைத் திணித்து, அவர் அதை துப்பினால் அதிலிருந்து மீண்டும் வாதத்தைத் தொடர்வது.

அதாவது ஆங்கிலத்தில் "Putting words into one's mouth" என்று சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்காவிட்டால் வேறு விதமாகத் தாக்குதல் தொடரும்.

எப்படி இருந்தாலும் இன்றைக்கு காரசாரமான விவாதப் பொருள் "பழனி.கந்தசாமி" யே.

கல்யாண வீடாக இருந்தால் தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். எளவு வீடாக இருந்தால் தான் பிணமாக இருக்கவேண்டும்.

இந்தப்  பழமொழி எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதற்கு நானே உதாரணமாவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால் இது நடந்திருக்கிறது.

நடந்த விஷயங்கள் நடந்து முடிந்தவை. அவை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

(தற்பெருமை தப்புத்தான். ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு என்று தமிழ் இலக்கண நூலான நன்னூலிலேயே சொல்லியிருக்கிறது. அதையொட்டியே இந்தப் பதிவு)