வியாழன், 22 ஜனவரி, 2015

வீடு வாங்குவது எப்படி? ஒரு புலம்பல்.


                                       

கார் வாங்குவதைப் பற்றி எழுதப்போக ஒருவர் வீடு வாங்குவதைப்பற்றி எழுதச்சொன்னார். நானும் பெரிய கித்தாப்பாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கும்போதுதான் வீடு வாங்குவது என்பது இன்றைய கால நிலவரத்தில் எவ்வளவு கடினமான விஷயம் என்பது உறைத்தது.

இன்றைய பொருளாதார நிலையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தால் ஜீவிக்க முடியும் என்பதற்கு ஒரு நிலையான பதில் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். நடுத்தர வர்க்கம் என்று சொல்லக் கூடியவர்கள் படும்பாடுதான் சொல்லில் அடங்காதது.

ஒரு பெரு நகரத்தில் இன்று வீட்டு வாடகை ஆகாசத்தில் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளிச் செலவோ நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்ந்து இருக்கிறது. உணவுப் பொருட்கள், கேஸ், காய்கறிகள் இவைகளைத் தவிர்க்க முடியாது. பண்டிகைகள், ஊர்ப்பிரயாணம், கல்யாணம் மற்றும் மற்ற விசேஷங்கள், வைத்தியம் இப்படி தவிர்க்கமுடியாத செலவுகளினால் மாதச் சம்பளக்காரர்கள் படும் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இப்படி இருக்கையில் எதிர் காலத்திற்காக எப்படிச் சேமிப்பது, வீடு வாங்குவது எப்படி, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த சோதனைகளையெல்லாம் எப்படித் தாண்டி வந்தேன் என்று நினைத்தால் ஒரு குழப்பம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் வீடு வாங்க என்ன யோசனை சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய வயதுதான் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. என்னால் இன்றுள்ள பொருளாதார நிலையை, அதில் வரும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் அனுபவம் இன்றைய காலகட்டத்தில் எதற்கும் உதவாது என்று புரிவதற்குத்தான் உதவும் என்று புரிகிறது.

நான் வளர்ந்த, வாழ்ந்த காலம் அப்படி. ஒரு மூட்டை (100 கிலோ) அரிசி 10 ரூபாய் என்று விற்றதைப் பார்த்தவன் நான். மார்க்கெட்டுக்கு ஐந்து ரூபாயைக் கொண்டு போனால் ஐந்து பேர் கொண்ட என் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவேன். என் கல்யாணத்திற்கு (1964) ல் மொத்தமாக 2000 ரூபாய் செலவு செய்தேன். நேற்று ஓட்டலுக்குப் போய் வந்த என் பேரன் ஆறு பேர் சாப்பிட்டதற்கு 2000 ரூபாய் பில் ஆகியது என்கிறான்.

இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு என்ன செலவு ஆகிறதென்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தின் அடி மட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தில்தான்.
ஆடம்பரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தவன் நான்.

அப்படி வளர்ந்த என்னாலேயே இன்றைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று உள்ள பொருளாதார நிதர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆகையால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.  நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.