செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஆஹா, காதல் வந்திருச்சு

                             Image result for income tax logo

"ஆஹா, காதல் வந்திருச்சு"

இந்தப் பாட்டை கமலஹாசன் பாடுவாரே, அது எந்தப் படமுங்க? இருங்க யோசிக்கிறேன். வயசாயிருச்சுங்களா, சட்டுனு கியாபகம் வரமாட்டேங்கிறது.

வந்திருச்சு "ஜப்பானில் கல்யாணராமன்" அந்தப் படத்தில கமலஹாசன் "ஆஹா காதல் வந்திருச்சு" அப்படீன்னு ஒரு பாடல் பாடுவார். அந்தப் பாடலைக் கேட்டிராதவர்களுக்காக ஒரு லிங்க் -



இப்போ ஏன் அந்த நெனப்பு வந்திருச்சு பெரிசு, எளம திரும்புதாங்காட்டியும்னு ஏசாதீங்க.

மார்ச் மாதம் என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு எமகண்டம். ஏனெனில் அப்போதுதான் வருடாந்திரக் கணக்குகளைப் பார்த்து வருமானவரி கட்டவேண்டிய நேரம். ரொம்பக் கஷ்டமான சமாச்சாரம். அதுக்காகத்தான் கமலஹாசன்-ஸ்ரீதேவி காதல் பாட்டைப் போட்டேன். எதுக்கும் இன்னொரு முறை அந்தப் பாட்டைக் கேட்டுருங்க. ஏன்னா நான் இனிமேல் சொல்லப்போவது ரொம்பவும் கசப்பான சமாச்சாரங்கள்.

எவ்வளவு கசப்பாக இருந்தாலும் குடித்தே தீரவேண்டிய கஷாயம் இந்த வருமானவரி சமாச்சாரம். இதில் ஒரு விசேஷமான செய்தி என்னவென்றால் வருமான வரியைப் பற்றி நீங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். நாளைக்கு வருமான வரிக்காரன் என்ன கேட்டாலும் அது எனக்குத் தெரியாதே என்று கூறி விடலாம். இதற்கு முன்னால் பல அரசியல் வாதிகள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சட்டத்திற்குட்பட்டு  வருமான வரியைக் குறைப்பது.  இரண்டாவது வருமானவரி கட்டாமல் ஏய்ப்பது. உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாட்டிக்கொள்ளாத வரையில் இரண்டு வழிகளும் சரியானவைகளே. மாட்டிக்கொண்டால் உங்கள் மாமனார் பிரபல வக்கீல் ஆக இருந்தால் ஒழிய நீங்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டி வரும். அவ்வளவுதான்.

வங்கியில் ஒரு வருடம் இரண்டு வருடம் சேமிக்க டெபாசிட் திட்டங்கள் உண்டு. இவற்றிற்கு 8 முதல் 9 சதம் வரை வட்டி கிடைக்கும். நம்ம பணம், நம்ம வட்டி, உனக்கு எதற்கு வரி என்று கட்டபொம்மன் பாணியில் கேட்டுக்கொண்டு இந்த வட்டியைக் கணக்கில் காட்டாமல் இருந்தீர்களோ, வம்பு அழையா விருந்தாளியாக வந்துவிடும். எல்லாம் "பான்" ( PAN ) எண் உபயம். உங்களுக்குக் கொடுக்கும் வட்டிக்கணக்கையெல்லாம் வங்கிக்காரன் இந்த எண்ணில் ஏற்றிவிடுவான். வருமான வரிக்காரன் இதைப் பார்த்துத்தான் உங்களுக்கு ஆப்பு வைப்பான்.

அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்குள் இருந்தால் மொத்த வரியையும் மார்ச் மாதத்தில் கட்டிவிட்டால் போதும். அதற்கு அதிகமாக இருந்தால் செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டியிருக்கவேண்டும். அப்படிக் கட்டாமலிருந்தால், உங்கள் வருமானவரிக் கணக்கை வருமானவரி அதிகாரி தணிக்கைக்கு எடுத்துக் கொண்டால் அபராத வட்டி கட்டவேண்டி வரும்.

இதில் ஒரு நுணுக்கம் என்னவென்றால் நம் போன்ற மாத வருமானக்- காரர்களை வருமான வரித்துறை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர அவர்களுக்கு இந்தத் தொகை பிச்சைக்காசுக்கு சமம். லட்சக் கணக்கில் வரி கட்டும் பணக்காரர்கள் இருக்கும் நாடு நம்முடையது. நம் நாட்டு சினிமா நடிகர்கள் வைத்திருக்கும் வரி பாக்கிக் கணக்கைப் பார்த்தால் நம் நாட்டை ஏழை நாடு என்று எவனுக்காவது சொல்லத்தோணுமா?

உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இத்தனாம் பெரிய நாட்டில் இத்தனை கோடி ஜனங்கள் இருக்கும் போது ஏன் இவ்வளவு கொஞ்சம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேட்பான். அதுக்காகத்தான் நம்மை மாதிரி அன்றாடம் காய்ச்சிகளிடமும் வருமான வரி வாங்குகிறார்கள்.

நம் வருமான வரிக் கணக்கை தணிக்கை செய்வதே ஏதோ ஒரு அருவருப்பானதைத் தொடுகிற மாதிரித்தான் நினைக்கிறார்கள். ஆனாலும் உங்கள் ஜாதகப் பிரகாரம் உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கிறது என்றால், உங்கள் வருமானவரிக் கணக்கு தணிக்கைக்கு எடுக்கப்பட்டு விடும். ஏனெனில் அவர்களுக்கும் வேலை செய்வதற்கு ஒரு இலக்கு வைத்திருக்கிறார்கள். பிச்சைக்கார வருமான வரிக் கணக்குகளில் இத்தனை கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறார்கள்.

சாதரணமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு வருமான வரி நிபுணர் இருப்பார். அவரை ஒழுங்காகக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்தால் அவர் உங்கள் வருமான வரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விடுவார். இல்லையென்றால் நீங்கள் உங்கள் தலை விதியை நம்பி, சீட்டுக் குலுக்கிப் போட்டு எது உங்களுக்கு சௌகரியமோ அந்த மாதிரி செய்து கொள்ளலாம். விதி வலிது. விதியை யாரால் மாற்ற முடியும்?

ஒரு கொசுறு தகவல் - மும்பையில் வருமான வரி கட்டும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள் என்று கேள்வி.  நம்மைப் போன்ற பிச்சைக்காரர்கள் இல்லை. நிஜப் பிச்சைக்காரர்கள்.