கோயமுத்தூரில் 1960 களில் இரண்டு மூன்று பெரிய ஓட்டல்கள்தான் இருந்தன. பெரிய கடைவீதியில் இரண்டு - "ரஞ்சித விலாஸ்" மற்றும் "பாம்பே ஆனந்தபவன்". ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒன்று - "ராயல் இந்து ரெஸ்டாரென்ட்" சுருக்கமாக ஆர் எச் ஆர் என்று அழைக்கப்பட்டது. அது தவிர "வுட்லேண்ட்ஸ்" என்று ஒரு ஓட்டல் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் இருந்தது. அது பணக்காரர்களுக்கானது. ஏனெனில் அது ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்ததால் சாதாரண ஜனங்கள் அங்கு போகமாட்டார்கள். இது தவிர ஆங்காங்கே பல பெயர் தெரியாத சிறு ஓட்டல்களும் டீக் கடைகளும் இருந்தன.
இந்த மூன்றில் "பாம்பே ஆனந்த பவன்" தான் அதிகப் பிரசித்தம். கடைவீதிக்கு வரும் ஜனங்கள் எல்லோரும் இதற்குத்தான் படையெடுப்பார்கள். எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். எல்லா உணவுப் பண்டங்களும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும். குறிப்பாக இட்லி சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும். காப்பியும் சூப்பராக இருக்கும்.
மாலை வேளைகளில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மட்டும் என்று ஓட்டலுக்கு போகிறவர்கள் கம்மி. கடைவீதிக்கு ஏதாவது வாங்கப்போனால் பர்சேஸ் முடித்து விட்டு இங்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவார்களே தவிர, டிபன் சாப்பிடுவதற்கென்று ஓட்டலுக்குப் போகிறவர்கள் குறைவு.
நாங்கள் ஆறு பேர் அசிஸ்டென்ட் புரொபசர்கள் இருந்தோம் என்று முன்பே சொல்லியிருந்தேனல்லவா? நாங்கள் இந்த ஓட்டலின் இட்லி சாம்பாரில் மயங்கிப் போனோம். ஆகவே ஏதாவது ஒரு சாக்கை வைத்துக்கொண்டு இங்கு செல்ல ஆரம்பித்தோம். பேச்சு வாக்கில் யாராவது ஏதாவது சொல்லி மாட்டிக்கொண்டால் அன்று ஆனந்தபவன் இட்லி சாம்பார் செலவு அவர் தலையில். வாரத்தில் இரண்டு நாளாவது இப்படிப் போவோம்.
எங்களுக்கென்று முதல் மாடியில் ரோட்டைப் பார்த்தவாறு ஒரு ஸ்பெஷல் உண்டு. அந்த டேபிளில்தான் உட்காருவோம். அடிக்கடி போய்க் கொண்டிருந்தபடியால் அங்குள்ள சர்வர்கள் நன்கு பழக்கமாகி விட்டார்கள். நாங்கள் இட்லி சாம்பார் சாப்பிடும் முறையே அலாதியானது. வழக்கமாக மொத்தம் நான்கு இட்லி சாப்பிடுவோம். ஆனால் அதை ஒன்றாக வாங்க மாட்டோம். இரண்டு இட்லி சாம்பார் என்று முதலில் ஆர்டர் கொடுப்போம். ஒரு தட்டில் இரண்டு இட்லியும் இட்லி தெரியாத அளவு சாம்பாரும் ஊற்றி ஒரு ஸ்பூனுடன் சர்வர் கொண்டு வந்து வைப்பார். உடனே இட்லியைச் சாப்பிடமாட்டோம். சாம்பாரை மட்டும் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு விட்டு சர்வர் அந்தப் பக்கம் மறுபடி வரும்போது திரும்பவும் சாம்பார் கேட்போம். அவர் மறுபடியும் தட்டு நிறைய சாம்பார் ஊற்றுவார்.
அதையும் முன்பு போலவே ஸ்பூனால் குடித்துவிட்டு மறுபடியும் சாம்பார் கேட்போம். சர்வரை நன்றாக கவனித்துக்கொள்வதால் அவர் சாம்பார் ஊற்ற சளைக்கமாட்டார். ஓட்டல் முதலாளி கீழே கல்லாவில் மும்முரமாக இருப்பார். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். மூன்றாவது தடவை சாம்பார் வாங்கும்போது இட்லி நன்றாக ஊறி இருக்கும். அந்த கட்டத்தில் சாம்பாருடன் இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம்.
பிறகு இன்னும் இரண்டு இட்லிக்கு ஆர்டர் செய்வோம். இட்லி வந்தவுடன் முன்பு செய்த மாதிரியே இரண்டு தடவை சாம்பாரை மட்டும் சாப்பிட்டு விட்டு மூன்றாவது தடவை இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம். எப்படியோ நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கு நாலு நாலு இட்லி சாப்பிடுவதற்குள் ஒரு பக்கெட் சாம்பாரைத் தீர்த்திருப்போம்.
கொஞ்ச நாள் நாங்கள் இப்படி சாம்பாரை மட்டும் குடிப்பதைப் பார்த்த சர்வர்கள் நாங்கள் போய் உட்கார்ந்ததும் முதல் டோஸ் இட்லி கொண்டு வரும்போதே ஒரு பக்கெட் சாம்பாரையும் கொண்டு வந்து எங்கள் டேபிளில் வைத்து விட்டுப் போய்விடுவார். அந்த பக்கெட்டைக் காலி செய்து விட்டுத்தான் நாங்கள்
புறப்படுவோம்.
அப்போதெல்லாம் பருப்பு விலை, காய்கறி விலை எல்லாம் சலீசாக இருந்ததால் நாங்கள் இப்படி சாம்பாரைக் குடித்தும் ஓட்டல் நன்றாக லாபகரமாகவே ஓடிக்கொண்டு இருந்தது. நங்களும் கொஞ்ச வருடங்கள் இப்படிச் சாம்பாரைக் குடித்து வளர்ந்தோம். பின்பு ஒவ்வொருவரும் பல காரணங்களால் பிரிந்து போக, இந்த லீலையைத் தொடர முடியாமல் போனது.
பிறகு அன்னபூர்ணா ஓட்டல் வந்தது. அதன் தாக்கத்திற்கு முன் மற்ற ஓட்டல்கள் சோபிக்க முடியவில்லை. எல்லா ஓட்டல்களும் மங்கிப்போயின. இன்று அந்த பாம்பே ஆனந்தபவன் இருந்த கட்டிடத்தை இடித்து விட்டு ஏதோ காம்ப்ளக்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.