மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
ஒவ்வொருவரும் எண்ணி எண்ணி வேதனைப்படும் கேள்வி இது. நான் மட்டும் இதற்கு விலக்காவேனா? நானும் இந்தக் கேள்வியைக் கேட்டதினால் வந்த பதிவுதான் இது.
மற்றவர்களைப் பற்றிய இப்படி ஒரு எண்ணம் ஏன் வருகிறது? உலகிலேயே தான் ஒருவன்தான் புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற கருத்து நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கிறது. அதுதான் நம்மை இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறது.
இதனால் நம் அடிமனதில் ஒரு வேட்கை உருவாகிறது. எல்லோரையும் நாம்தான் உய்விக்கவேண்டும், நம்மை விட்டால் அவர்களைக் கடைத்தேற்ற வேறு யாரும் இந்த பரந்து விரிந்த உலகில் இல்லை. இப்படிப்பட்ட எண்ணங்களுடன் பலர் வாழ்கிறார்கள்.
இவர்கள் யாரைப் பார்த்தாலும் அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்குத் தேவையோ இல்லையோ, இவர்கள் பாட்டுக்கு தங்கள் போதனைகளை ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே, அவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா, அப்போது அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ, அதைத்தானே செய்வார்கள் என்ற ஞானம் இப்படிப் பட்டவர்களிடத்தில் இல்லாமல் போவதுதான் உலக மகா அதிசயம்.
நானும் முன்பெல்லாம் இந்த தவற்றை, தப்பு, தவறு அல்ல, முட்டாள்தனத்தைச் செய்து வந்தேன். பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த பிறகு, இப்போது கொஞ்சம் அறிவு வந்து விட்டது. இப்போதெல்லாம் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் விருப்பம், செய்யட்டுமே, அதனால் வரும் இன்ப துன்பங்களை அவர்க்ளதானே அனுபவிக்கப் போகிறார்கள், என்ற எண்ண்த்தில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை.
இதுதான் மனமுதிர்ச்சி அடைந்தவர்கள் அனுசரிக்கவேண்டிய நடைமுறை. இதை விட்டி விட்டு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று யாரும் கேட்காமல் புத்தி சொல்லிக்கொண்டு திரிவீர்கள் என்றால் உங்களை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவேண்டி வரும். ஜாக்கிரதை. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று இனிமேல் கேட்க மாட்டீர்கள் அல்லவா?
எல்லாம் சரி, இப்போது நான் ஏன் இப்படி அறிவுரை கூறப் புகுந்து விட்டேன் என்று கேட்கிறீர்களா? பதிவு எழுத வேறு நல்ல சப்ஜெக்ட் கிடைக்கவில்லை, அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் எல்லோரும் என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படி இருப்பதினால்தான் என்னை தமிழ்மணம் தரவரிசையில் ஆறாவதாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.
எல்லோருக்கும் நன்றி.வணக்கம்.
பின்குறிப்பு: சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் தன் பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குத் தோன்றிய எண்ணங்க்ள.