முன்னொரு காலத்தில் சினிமா மட்டுமே மக்களின் முழுமையான பொழுது போக்கும் வழியாக இருத்தது. வேறு பொழுது போக்கும் வழிகள் கிளப்பில் சீட்டாடுவது அல்லது கிளப்பில் ஏதாவது விளையாட்டுகள் விளையாடுவது, வீட்டிலுள்ள பெண்கள் தாயக்கட்டம், அல்லது பல்லாங்குழி விளையாடுவது உண்டு.
ஆனாலும் சினிமா பார்ப்பது மட்டுமே அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பொழுது போக்குகளின் முக்கிய அம்சம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் மனப்போக்கு என்னவென்று கூடப் பழகுபவர்களுக்குத் தெரியும்.
இன்று தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று தந்தைக்குத் தெரியாது. அவன் என்னமோ கம்ப்யூட்டரில் விளையாடுகிறான் என்ற அளவிற்குத்தான் தெரியும். இது காலத்தின் கட்டாயம். குடும்பத்துடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வரும் அனுபவம் குடும்ப அங்கத்தினர்களிடையே ஒரு புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.
அந்தக்காலத்தில் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டும்போது அந்த ஊரில் இருக்கும் தியேட்டர்களைவிட நூதனமாக இருக்கவேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டார்கள். கோயமுத்தூரில் திரைப்படத்துறையில் முன்னோடியாக விளங்கிய பிரபல சினிமா புள்ளி திரு. சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். நகரத்தின் மையத்தில் வெரைட்டி ஹால் என்று ஒரு தியேட்டர் கட்டி வெற்றிகரமாக நடத்தினார். இந்த தியேட்டர்தான் அந்தக்காலத்தில் தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் தியேட்டர் என்று சொல்லப்படுகிறது. இங்கு முதலில் ஊமைப் படங்கள்தான் திரையிடப் பட்டிருக்கின்றன. அந்த தியேட்டர் இருந்த ரோடுக்கே வெரைட்டி ஹால் ரோடு என்று பெயர் நிலைத்து விட்டது.
அவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிதாக வின்சென்ட் லைட்ஹவுஸ் என்ற பெயரில் 1945-46 ல் ஒரு தியேட்டர் கட்டினார். அதில் பல கலை நுட்ப அலங்காரங்களைப் பயன் படுத்தியிருந்தார். சுவர்களில் பல ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. விஸ்வாமித்திரர் மேனகையுடன் சல்லாபித்து பிறந்த குழந்தையை நிராகரிக்கும் காட்சி தத்ரூபமாக திரைக்கு ஒரு பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அலங்கின் பின் சுவற்றில் சாகுந்தலத்திலிருந்து பல காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன.
இதில் முதல் படமாக நாகையா நடித்த "தியாகையா" என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்கு 12 வயது. அடுத்த படமாக மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. அதை நான் என் அத்தையுடன் பார்த்தேன். தியேட்டரின் அமைப்பும் அலங்காரங்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன. படமும் மிகவும் உணர்ச்சி வசமான காட்சிகள் நிறைந்த படம். "வாராயோ வெண்ணிலாவே" என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பாட்டு.
அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சினிமா பார்த்த பிறகு ஏற்படும் ஒரு மன நிறைவு இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களில் கிடைப்பதில்லை என்பது ஒரு சோகமே.
அப்போது கோயமுத்தூரில் 9 தியேட்டர்கள்தான் இருந்தன. அவைகள் ஒவ்வொன்றிலும் வழக்கமாக சில பேனர் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஜெமினி படங்கள் ராயல் தியேட்டரிலும் ஏவிஎம் படங்கள் கர்னாடிக் தியேட்டரிலும் வழக்கமாக வெளியாகும். அந்தக் காலத்து சினிமா வியாபாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேனர் படங்களுக்கும் வழக்கமாக ஒரே விநியோகஸ்தர்தான் இருப்பார். புரோடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர்காரர், இந்த மூன்று பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது.
வியாபாரத்தில் எந்த சிக்கலும் வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. அந்தக் காலத்தில் படம் வெளியாகும் தினத்தன்று எல்லா முக்கிய செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் வெளியாகும். அதுபோக நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்ப பேனர்கள் வைப்பார்கள். இது தவிர முக்கிய வியாபார ஸ்தலங்களில் மூன்றடிக்கு இரண்டடி சைசில் தட்டி பேனர்கள் வைப்பார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு ஒரு ஷோ சினிமா பார்க்க ஒரு பாஸ் கொடுப்பார்கள். அதற்கு "தட்டிப் பாஸ்" என்றே பெயர்.
இது தவிர நான்கைந்து சிறுவர்களை வைத்து ஒரு தள்ளு வண்டி, முக்கோண வடிவில் இருக்கும், அதில் சினிமா போஸ்டர்களை ஒட்டி கோஷம் போட்டுக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். அவர் போடும் கோஷமே அலாதியானது. ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் கோரஸாக அதற்குப் பதில் சொல்லுவார்கள்.
என் நினைவில் இருக்கும் கோஷங்களைக் கூறுகிறேன்.
கேள்வி: கோபாலா
பதில்: ஏன் சார்?
கே: எங்கே போற?
ப: சினிமாவுக்குப் போறேன்.
கே: என்ன சினிமா?
ப: மிஸ்ஸியம்மா சினிமா
கே: எந்த தியேட்டர்ல?
ப: வின்சென்ட் லேட்ஹவுஸ் தியேட்டர்ல
கே: யாரு நடிக்கிறாங்க
ப: ஜெமினி கணேசனும் சாவித்திரியும்.
இப்படியாக கோஷம் போட்டுக்கொண்டே அந்த சிறுவர்கள் வீதி வீதியாகப் போவார்கள்.
அப்போது டிக்கட்டுகள் நான்கு வகையாக இருக்கும். தரை, பெஞ்சு, சேர், பாலகனி. அவ்வளவுதான். வின்சென்ட் லைட் ஹவுசில் பாக்ஸ் என்று ஒரு அமைப்பு உருவாக்கியிருந்தார்கள். நான்கு பேர் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இது மாதிரி அப்போது எங்கும் இல்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.
பிற்காலத்தில் ஊர் ஊருக்கு இந்த மாதிரி புது தினுசுகளில் தியேட்டர்கள் வர ஆரம்பித்தன. மதுரை தங்கம் தியேட்டர் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரும் அது போலவே பிரபலமானது.
இப்படியாக தியேட்டர்களும் சினிமாக்களும் வளர்ந்து இன்றைக்கு சினிமாத் தொழில் படு கேவலமாக ஆகி வருவதைப் பார்த்தால் காலத்தின் தாக்கம் புரிகிறது.