ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்

                                            

சில நாட்கள் முன்பு பிரபல பதிவர் திரு. வை கோபாலகிருஷணன் ஒரு சிறுகதை விமரிசனப்போட்டி வைத்தது எல்லோரும் அறிந்ததே. சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதுவது என்பது சிறுகதை எழுதுவதை விடக் கடினமானது என்பதை இந்தப் போட்டியில் பங்கு பெற்றபோதுதான் அறிந்தேன்.

நான் சிறுகதைகளை ஆவலுடன் படிப்பேன். சில சமயம் இந்த எழுத்தாளர்கள் எப்படி துளியூண்டு கருவை வைத்துக்கொண்டு இம்மாம் பெரிய கதைகளை எழுதுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வேன்.

திரு வைகோ அவர்கள் வைத்த 40 சிறுகதை விமரிசனப் போட்டியில் எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். ஒரே ஒரு மூன்றாம் பரிசும் ஒரு ஆறுதல் பரிசும் மட்டுமே கிடைத்தன. இருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற மனத்திருப்தி கிடைத்தது. நான் எழுதின விமரிசனங்கள் சிலவற்றை சில காலம் முன்பு இந்தத் தளத்தில் வெளியிட்டேன். பிறகு ஏனோ பல காரணங்களால் நின்று விட்டது.

இப்போது தொடர்ந்து அந்த விமரிசனங்களை வெளியிடப்போகிறேன். அதற்கு என்ன திடீர் என்று ஞானோதயம் வந்து விட்டது என்று கேட்பவர்களுக்காக இந்த பதில். ஞானோதயம் ஒன்றும் வரவில்லை. பதிவு எழுத விஷயம் இல்லை. அதனால் பழைய சோற்றை சூடாக்கிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

இந்த விமரிசனத்திற்கு உண்டான கதை வைகோவின் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

VGK 17 - சூ ழ் நி லை

விமர்சனம்.

மனிதர்கள் அனைவரும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களே. அதுவும் போனில் பேசம்போது எதிர்பக்கத்திலிருந்து வரும் செய்திக்கேற்ப உணர்ச்சிகளை காட்டாமலிருப்பவர்கள் அபூர்வம்.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் திரு. வைகோ அவர்கள். அலங்காரத்திற்காக இரண்டு உப-பாத்திரங்கள். மனவியும் மகளும். ஆனால் அவர்கள் இந்த மனிதருடன் பல காலம் பழகியும் இவருடைய அந்தரங்கத்தை படிக்கவில்லையே என்பது கதையின் ஒரு குறை.

கடைசியில் சிக்கல்கள் தீர்ந்து கதை சுபமாய் முடிவது மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது. மணப்பெண் ஜெயா சகல சௌபாக்கியங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதிற்குள் வாழ்த்துகிறோம்.