நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள் அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.
பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.
அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம். நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.
கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.
இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia) என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.
வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.
மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.
அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள். பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?
மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.
இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.
பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.
ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம் செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.
தொடரும்.