வெள்ளி, 16 அக்டோபர், 2015

புதுக்கோட்டைத் திருவிழா - என் பிரவேசம்



10-10-2015 சனியன்று  (அதாவது பதிவர் திருவிழாவிற்கு முன்தினம்) நான் புதுக்கோட்டை போய்ச்சேர்ந்தபோது மணி மாலை 6. எனக்கு எங்கு ரூம் போட்டிருக்கிறார்கள் என்று சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி ஏன் வீணாக அலைவானேன், பதிவர் விழா நடக்கும் மன்றத்திற்கே போய் விட்டால் அங்கு விவரம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு ஆரோக்யமாதா மக்கள் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

இதற்கு முன் நடந்தவைகளைப் பற்றி ஒரு flashback. கமலஹாசன் தெனாலியில் ஒரு  flashback சொல்வாரே< நினைவிருக்கிறதா? அந்த மாதிரி ஒரு
Image result for சுழல்போட்டுக்கொள்ளுங்கள்.

நான் புதுக்கோட்டை போவதென்று முடிவு செய்தவுடனேயே, அங்கு போனால் எங்கு தங்குவதென்று யோசனை செய்தேன். விழாக்குழுவினருக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். ஒரு பதிலும் வரவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு பல கமிட்டிகள் போட்டிருப்பதாகவும் அதல் வ,வேற்புக் கமிட்டி என்று ஒன்று இருப்பதாகவும் ஒரு பதிவு வெளி வந்தது. அதில் மூன்று பேர்களின் பெயர் கொடுத்து அதில் யாரைத் தொடர்பு கொண்டாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் என்று போட்டிருந்தது.

நான் திருமதி கீதா அவர்களுக்குப் போன் போட்டுப் பேசினேன். நான் என் தேவையைச் சொன்னதும் ஆஹா, பேஷச் செஞ்சுடறேன் அப்படீன்னாங்க. நான் நூன்று நாள் காத்திருந்தேன். ஒரு செய்தியும் வரவில்லை. இதற்கு நடுவில் நான் எங்கள் ஓய்வு பெற்றோர் சங்க ஆண்டு விழாவிற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்தேன். அப்போது நினைவிற்கு வந்தது. என்ன புதுக்கோட்டையில் இருந்து ஒரு தகவலும் காணோமே, சரி ஒரு குறுஞ்செய்தி கொடுத்து வைப்போமே என்று செல்போனிலிருந்து திருமதி கீதா அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இந்த செய்தி அனுப்பிய நேரம் காலை 4.45 மணி. நான் என் வாழ்வில் சந்தித்திராத ஒரு அனுபவம் அப்போது நடந்தது. நான் குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியில் எதிர் பக்கத்தில் இருந்து பதில் செய்தி. ஐயா, உங்கள் பெயரும் ஊரும் செல்லுங்கள் என்று செய்தி. நான் இந்த இரண்டையும் முதலில் கொடுக்க மறந்து விட்டேன். அந்த இரண்டு தகவல்களையும் கொடுத்தவுடன், ஐயா, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், இப்போதே ஆவன செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு பதினைந்து நிமிடத்தில் அறை முன்பதிவு செய்த ஓட்டலின் பெயர், அறைக்கட்டணம் ஆகிய விவரங்கள் வந்து விட்டன.

இவ்வளவு சுறுசுறுப்பாக விழாக் குழுவினர் தூக்கமில்லாமல் வேலை செய்கிறார்கள் என்றால் விழா நன்றாகவே நடக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அந்த எண்ணத்தையும் குறுஞ்செய்தி மூலம் கீதாவிற்கு அனுப்பினேன்.

இப்போது flashback முடிந்தது. நிஜத்திற்கு வருவோம். நான் புதுக்கோட்டையில் இறங்கி விழா மன்றத்திற்கு ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு போனேன். சாதாரணமாக நான் சிறிய தூரத்திற்கெல்லாம் ஆட்டோ வைப்பதில்லை. ஆனால் அன்று கொஞ்சம் சோர்வாக இருந்ததினால் ஆட்டோ வைத்தேன்.

மன்றத்தின் வாசலில் இறங்கியதுமே திருமதி கீதா வாசலிலேயே ஏதோ வேலையாக நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்தவுடன் வரவேற்று மன்றத்திற்குள் அழைத்துச்சென்று திரு முத்துநிலவனிடம் அறிமுகப்படுத்தி விட்டு ஒரு சக தொண்டரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவரும் அப்படியே என்னைக்கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் அறிமுகப்படுத்தி விட்டார். உடனே ஒரு அறை (ரூம்) கொடுத்தார்கள். ரூம் நன்றாக இருந்தது.

                         

ரூமில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு மணியைப் பார்த்தேன். மணி ஏழுதான் ஆகியிருந்தது. சரி. மன்றத்திற்குப் போய் விழாக்குழுவினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று பொடி நடையாக மன்றம் போனேன். விழாக்குழுவினர் பம்பரம்போல் பல வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பதிவர்களும் வந்திருந்தார்க்ள. திரு.ரமணி, திரு.செல்லப்பா, திரு.கவியாழி கண்ணதாசன் ஆகியாரைச் சந்தித்தேன்.


                 
பிறகு வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் யாரென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது. மழை விட்டவுடன் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரூமுக்குப் போய் தூங்கினேன். இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள். சரி, என்ன செய்ய முடியும்? கொடுத்துவிட்டு வந்தேன். எங்கள் ஊரில் அன்னபூர்ணாவில் இட்லி விலை ரொம்பவும் சலீசு. நான்கு இட்லிக்கும் சேர்த்து ஐம்பத்திரெண்டு ரூபாய் மட்டுமே வாங்குவார்கள்.

அடுத்த நாள் சமாச்சாரங்கள் அடுத்த பதிவில்.