மக்களுக்கும் மாக்களுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திப்பவர்கள் மக்கள். சிந்திக்காதவர்கள் மாக்கள். நீங்கள் மக்களாக இருக்க விரும்பினீர்களானால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை நாங்கள் மாக்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்றால் வேறு தளத்திற்குப் போய்விடுங்கள்.
உடல் ஜடம், மனதுதான் காரணி. அதாவது உடலினால் தானாக எதுவும் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய உத்திரவுகளை மனது பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் உடல் செயல்படும்.
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனாலும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் இந்த இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். ஏனெனில் உடல் மனது இரண்டும் எப்போதும் இணைந்தே செயல் புரிகின்றன. அவைகளுக்குள் மாறுபாடு என்பதே வருவதில்லை. ஆகவே இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வதில் எந்த சங்கடமும் வராது. இதில் தவறு எதுவும் இல்லை.
ஆனால் இந்த மெத்தப் படித்தவர்கள், அதிலும் கொஞ்சம் ஆன்மீகம் தெரிந்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான், உடல் வேறு, மனது வேறு என்று சொல்லிக்கொண்டு தாங்கள் குழம்புவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குழப்புவார்கள். இவர்கள் ஆன்மா என்று மூன்றாவதாக ஒன்றையும் உட்புகுத்தி இருக்கிறார்கள். சரி ஐயா, ஆன்மா என்றால் என்ன என்கிற கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.
அதனால் ஆன்மாவை விட்டு விடுவோம். நம் ஆராய்ச்சியை உடல், மனது என்ற இரண்டிடம் மட்டும் வைத்துக்கொள்வோம். இந்த உடல் உயிர் இருந்தால்தான் இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. உடலில்தான் மனது இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சி இப்போதைக்கு வேண்டாம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் உடல் இருக்கும் ஆனால் இயங்காது. உயிரற்ற உடலில் மனது இல்லை.
எனக்குப் புரிந்த வகையில் உயிர் என்பதுதான் ஆன்மா. ஆன்மா பிரிந்தது என்றாலும் உயிர் பிரிந்தது என்றாலும் ஒன்றுதான். உடலை விட்டுப் பிரிந்த உயிர் என்னவாகிறது என்பதில்தான் அனைத்துக் குழப்பங்களும் வருகின்றன. அதாவது உடலின் அவயவங்கள் அனைத்தும் தங்கள் திறன் குன்றி, அவைகளின் இயக்கத்தை நிறுத்தி விடுவதைத்தான் உயிர் பிரிந்தது என்கிறோம். அதாவது உடல் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. உயிர் என்று ஒரு பொருள் இருந்தாலல்லவா அது பிரிவதற்கு? அப்படி ஒரு பொருள் இல்லாததினால் ஒருவனுடைய உடல் இயக்கம் நின்று விட்டது என்று சொல்வதுதான் சரியான செய்தியாகும். ஆகவே அந்த உயிர் எங்கே போயிற்று என்று சிந்திக்கவேண்டியதில்லை.
கிராமங்களில் இதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். "அவன் செத்துப் போய் விட்டான்" என்று எளிமையாகவும் நிதர்சினமாகவும் சொல்கிறார்கள். இந்தப் படித்த மேதாவிகள்தான் அவனுடைய ஆன்மா பிரிந்தது, அவர் பரமபதம் அடைந்தார், இயற்கை எய்தினார், விண்ணுலகம் ஏகினார், இப்படி பல வார்த்தைகள் உபயோகித்து ஒருவனுடைய இறப்பை குழப்புவார்கள்.
மக்களே, குழம்பாதீர்கள், தெளிவாக இருங்கள், மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.