சனி, 21 மே, 2016

இந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்

                            Image result for ஓட்டுக்குப் பணம்

இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பல கட்சிகளின் சார்பிலும் கொடுக்கப்பட்டது என்று பலவலாகப் பேசிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். என்னுடைய காதிற்கும் இந்த செய்தி அப்படியே அரசல் புரசலாக வந்தது.

நானும் மிக ஆவலுடன் இந்த அன்பளிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசை இலவு காத்த கிளி போல் வீணாகிப்போனதில் என் மனது செக்கு நூறாக உடைந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பெவிகால் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இலவு காத்த கிளி என்றால் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பச்சைத் தமிழன் ஆகவே எனக்குத் தெரியும். அந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறேன்.

இலவம் பஞ்சு என்பது ஒரு வகையான மரத்தில் காய்க்கும் காய்களிலிருந்து எடுக்கும் பஞ்சு. இதை மெத்தை தலையணைகளில் அந்தக் காலத்தில் உள்ளே திணித்து தைப்பார்கள். உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்தக் காய்கள் பச்சைப் பசேல் என்று இருக்கும்.

சில கிளிகள் இதை ஒரு வகை பழம் போல் நினைத்து இது பழுக்கட்டும், பழுத்த பிறகு திங்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும். ஆனால் இந்தக் காய்கள் பழுக்காமல் திடீரென்று ஒரு நாள் வெடித்து விடும். காத்துக்கொண்டிருந்த கிளிகள் நமது காப்டன் மாதிரி ஏமாந்து போகும்.

நானும் இந்த மாதிரி ஆகிப்போனேன். ஒரு பயலும் என்னிடம் வந்து,  "தாத்தா, ஓட்டுப்போடுவதற்கு இதோ அன்பளிப்பு" என்று கொடுக்கவில்லை. எனக்கு என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கம் மாறவே மாட்டேனென்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து சர்வதேசக் கோர்ட்டில் ஒரு வழக்கு பதியலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

அதனால்தான் நான் ஓட்டுப்போடவில்லை என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அவைகளை ரகசியமாகப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                              Image result for கேப்டன் விஜயகாந்த்