வியாழன், 21 ஜூலை, 2016

நம் உணவு முறையை மாற்றவேண்டும்.


                             Image result for south indian food on banana leaf

இது நவீன உலகம். கற்காலத்திலிருந்து எவ்வளவோ கணக்கிலடங்காத முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  மனிதன் தன்னுடைய சௌகரியத்திற்காக பல விதமான உபகரணங்கள் கண்டு பிடித்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறான். கற்காலத்தில் மனிதன் இயற்கையாக இருந்த மலைக் குகைகளில் வாழ்ந்தான். வெய்யில், மழை,  காற்று ஆகிய இயற்கை உத்பாதங்களுக்கு உட்பட்டு இருந்தான்.

இப்போது அவன் வசிக்கும் வசிப்பிடங்களைப் பாருங்கள். இயற்கை சலனங்கள் அவனை எவ்வகையிலும் பாதிக்காத மாதிரி தன் வசிப்பிடங்களை அமைத்திருக்கிறான். அவன் நினைத்த சீதோஷ்ண நிலையை ஒரு கையசைவில் கொண்டு வர அவனால் முடியும்.

முன்பு அவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக அவனுடைய கால்களை மட்டுமே நம்பி இருந்தான். இப்போது எத்தனைவிதமான வாகனங்கள் வந்து விட்டன. அவற்றை உபயோகப் படுத்தி நாம் நம் வாழ்க்கையை எளிமைப் படுத்திக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

அது போல நம் உணவு முறையிலும் பல மாற்றங்கள் தேவை. இப்போது நம் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடும்பங்களை எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள பெண்கள் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரையிலும் சமையலறையிலேயே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். காலையில் பெட் காப்பியிலிருந்து ஆரம்பித்து இரவு படுக்கப்போகும் முன் குடிக்கும் பால் வரை எத்தனை விதமான உணவுகளைத் தயார் செய்கிறார்கள்?

இந்த அதீத வேலை அவசியமா?  தமிழர்களே, யோசியுங்கள். உதாரணத்திற்கு தமிழனின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் இட்லியை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு தேவைப்படும் உழைப்பை சிறிது யோசித்துப் பாருங்கள். நல்ல அரிசியையும் நல்ல உளுந்தையும் சரியான விகிதத்தில் எடுத்து, தனித்தனியாக ஊறப்போட வேண்டும். பிறகு அவைகளை நன்றாக களைந்து சரியான அளவு தண்ணீர் விட்டு ஆட்டுக்கல்லில் ஆட்டவேண்டும். பிறகு இரண்டு மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சரியான அளவு உப்பு போட்டு கலக்கி வைக்கவேண்டும்.

இதை மாலை நேரத்தில் செய்யவேண்டும். இரவு முழுவதும் இந்தக் கலவையை பத்திரமாக வைத்திருந்தால் மறு நாள் காலை இந்த மாவு புளித்து பொங்கி வந்திருக்கும். இந்த புளிக்கும் விஷயம் இருக்கிறதே, இதைப் பற்றியே பல முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி செய்யலாம்.

இதில் கைவாகு என்று ஒன்று இருக்கிறது. சிலர் கலக்கி வைத்தால்தான் இந்த மாவு நன்றாகப் புளிக்கும். இதை ஒருவருடைய கைவாகு என்று சொல்லுவார்கள். நன்றாகப் புளித்தால்தான் இட்டிலி மல்லிகைப் பூ மாதிரி வரும். சிலருடைய கைவாகுக்கு மாவு சரியாகப் புளிக்காது. அப்போது இட்லி பச்சை வாடை அடிக்கும். இட்லி சாப்பிட்ட திருப்தி வராது.

பிறகு இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, மிளகாய்ப் பொடி + நல்லெண்ணை, சாம்பார், தொக்கு, இத்தியாதிகள். ஒவ்வொன்றிலும் டஜன் கணக்கில் வேறுபாடுகள்.

சட்னியில் தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, மிளகாய்ச்சட்னி, பருப்புச் சட்னி, இப்படிப் பல வகைகள்.

பொடி வகைகளில் எத்தனை வகை? சொல்லி முடியாது. அதே போல் சாம்பார்கள். வெங்காய சாம்பாருக்கும் இட்லிக்கும் உள்ள பொருத்தம் வேறு எதற்கும் கிடையாது. என்ன இருந்தாலும் எங்க ஊர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் போல் எங்கும் இல்லை என்று நான் சொல்லுவேன். அந்தந்த ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் அபிமான ஹோட்டல்களின் சாம்பார்தான் உயர்ந்தது என்று சொல்லிக்கொள்வார்கள்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இட்லியும் கோழிக் குருமாவும் சாப்பிட்டால் தேவாம்ருதம் சாப்பிட்ட மாதிரி.

பாருங்கள், தமிழ் நாட்டின் ஒரு உணவிற்கே இத்தனை கதை இருக்கிறது. எல்லா உணவு வகைகளையும் பற்றி சொல்வதென்றால் சுமார் ஆயிரம் பதிவுகள் போட வேண்டு வரும்.

இன்று வாலிப வயதில் இருக்கும் நவ நாகரிக யுவதிகள் சமையல் கட்டையே பார்த்திராதவர்கள். அவர்களைப் போய் எனக்கு மல்லிகைப்பூ இட்லி சுட்டுக்கொடு என்று அவள் புருஷன் கேட்டால் அவள் என்ன சொல்வாள். ஒரு கிலோ மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் என்பாள்.

ஆணைப் போல் பெண்ணும் இன்று பொருள் ஈட்டுகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று மேடைதோறும் முழங்குகிறோம். அப்படியானால் அவள் இன்னும் சமையலைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படவேண்டும்? இந்த பிரச்சினைக்கு இன்றைய இளைய தலைமுறையினர்தான் தீர்வு சொல்லவேண்டும்.

அமெரிக்கர்களும் அங்கு இருக்கும் இந்தியர்களும்  (இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில்)  நான் அறிந்தவரையில் இப்போது சொல்லும் உணவு முறையை அனுசரிக்கிறார்கள்.

காலை உணவு:

முதலில்  ஒரு  பெரிய டம்ளர் பழரசம். இவைகள் ரெடியாகக் கிடைக்கின்றன. விலையும் மலிவு. பிறகு நான்கு ஸ்லைஸ் ரொட்டி. ரோஸ்ட் பண்ண ரோஸ்டர்கள் உண்டு.  ரொட்டியில் ஜாம் வெண்ணை, அசைவ உணவுகள் எதை வேண்டுமானாலும் வைத்து விழுங்கவேண்டியதுதான். பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது காப்பி.

காலை 11 மணிக்கு ஆபீசில் காப்பி ரூமில் காப்பி, பிஸ்கட். செலவை ஆபீசில் உள்ளவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

மதியம். ஆபீஸ் கேன்டீனில் ஒரு சேண்ட்விச் + ஒரு கோக்கோ கோலா

மாலை 4 மணி காப்பி, பிஸ்கட்

இரவு உணவு:

இதைத்தான் தயார் செய்ய கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். இந்தியர்கள் சப்பாத்தி அல்லது தோசை. அமெரிக்கர்கள் ஒரு அசைவ உணவு. கூடவே பல ரெடிமேட் சமாச்சாரங்கள்.

இந்த உணவு முறையில் நேரம் மிச்சமாவதோடு வேலையும் குறைவு.

நாமும் இந்த முறையை கடைப் பிடிக்கலாம்.  கணிணித் துறையில் இருப்பவர்கள் ஏற்கெனவே இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்திருக்கலாம்.