ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

ஒரு நேர்மறைப் பதிவு

                    Image result for சூரிய உதயம்
இன்று காலை எழுந்திருந்தேன். இப்போதெல்லாம் காலையில் எழுந்திருப்பதே ஒரு ஆனந்தம். ஆஹா, இன்னும் ஒரு நாள் நான் இந்த சுவர்க்க பூமியில் இருக்கப்போகிறேன் என்பதே ஒரு ஆனந்தமல்லவா?

பல் விளக்கி வந்தவுடன் சூடாக ஒரு காப்பி கிடைத்தது. காப்பி சூப்பராக இருந்தது. பிறகு நடைப் பயிற்சிக்குப் போனேன். தெருக்களெல்லாம் பளிச்சென்று சுத்தமாக இருந்தன. துப்புரவுத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

நாளை சுதந்திர தினமல்லவா? மக்களுக்கு தேச பக்தி பொங்கி வழிவதை என் இரு கண்ணாலும் பார்த்தேன்.

கார்க்காரர்கள் நடைப் பயிற்சிக்காரர்ளைக் கண்டவுடன் வேகத்தைக் குறைத்து தள்ளிப்போனார்கள். பைக்கில் போகிறவர்கள் சைக்கிள் வேகத்தில் போனார்கள். நடைப் பயிற்சி முடித்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு ரெடியானவுடன், எனக்கு மிகவும் பிடித்த இட்லி-சாம்பார் டிபன் ரெடியாக இருந்தது.

ஒரு அரை டஜன் இட்லிகளை சாம்பாருடன் விழுங்கி விட்டு அப்படியே சேரில் சாய்ந்தேன்.  அன்றைய பேப்பர்களைப் பார்த்தேன். எல்லாம் நல்ல செய்திகளாகவே இருந்தன. அதில் முக்கியமான செய்தி- ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்கப் போவதான செய்தி. அப்படி வரும் அதிக ஓய்வூதியத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

 அப்படியே கொஞ்சம் தூங்கி விட்டேன் போல இருக்கிறது. வீட்டுக்காரி என்னை எழுப்பி சாப்பிடக்கூப்பிட்டாள். பகல் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து நன்றாகத் தூங்கினேன்.

மாலை 5 மணிக்கு விழித்தவுடன் நல்ல மணமான காப்பி வந்தது. குடித்து விட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இந்தப் பதிவை தட்டச்சினேன். மனம் நிறைவாக இருந்தது.

நான் எதிர்மறையாளனாக மாறிவிட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக்கொண்டதால் இந்த நேர் மறைப் பதிவை எழுதினேன். இதிலும் போதுமான அளவு நேர்மறை இல்லையென்றால் பின்னூட்டத்தில் கூறவும். ஆனால் நான் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.