செவ்வாய், 18 அக்டோபர், 2016

"பேலியோ" டயட்

                         
                         Image result for paleolithic age

பேலியோலித்திக் காலம் என்பது  (Paleolithic age) மனித இன பரிணாம வளர்ச்சியில் இரண்டரை மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலம். இதை பழைய கற்காலம் என்று கூறுவார்கள். மனிதன் நாகரிகம் அடையாத காலம். மொழி தோன்றாத காலம்.

இந்தக் காலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைப் பற்றிய செய்திகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிலபல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் யூகித்தறிந்தவையே. இந்த யூகங்களின் அடிப்படையில் அக்காலத்து மனிதர்கள் எவ்வகையான உணவைச் சாப்பிட்டிருந்திருப்பார்கள் என்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இயற்கையில் விளைந்திருக்கக்கூடிய பழங்கள், கிழங்கு வகைகள், சிறு அல்லது நடுத்தர அளவுள்ள மிருகங்கள் ஆகியவைகளே அவர்களின் உணவாக இருந்திருக்கக் கூடும். இது ஒரு யூகம் மட்டுமே. இந்த உணவுத் தேடல்களுக்கு அவன் கற்களால் ஆன சில கருவிகளை உபயோகித்திருக்கக்கூடும். அத்தகைய கருவிகள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன.

இந்த யூகங்களின் அடிப்படையில் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது "பேலியோ டயட்" என்ற இயக்கம்.
அதாவது கற்காலத்து மனிதன் மாமிசம் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தான். அவன் ஆரோக்யமாக இருந்தான். அதே போல் நாமும் இப்போது மாமிச உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்யமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வளவோ பேசலாம், எழுதலாம், விவாதம் செய்யலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிவு மட்டுமே போதாது. உலகில் அவ்வப்போது சிலர் இந்த மாதிரி ஒரு புது வார்த்தையை உபயோகித்து பல ஜாலங்கள் செய்வதுண்டு. மக்களை மயங்குமாறு பேச்சுத் திறமையை உபயோகித்து, மக்களை மூளைச் சலவை செய்வதுண்டு.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே எழுகின்றது. அதாவது கற்காலத்து மனிதனுக்கு நெருப்பை உபயோகிக்க தெரிந்திருக்கவில்லை. அதே போல் உப்பையும் அவன் கண்டிருக்கவில்லை. இப்போது பேலியோ உணவைப் பற்றிப் பேசுபவர்கள் அவ்வாறே நெருப்பை உபயோகப் படுத்தாமலும் உப்பையும் உபயோகப் படுத்தாமலும் அவர்கள் உணவைச் சாப்பிடுகிறார்களா?

பதிவர்கள் தங்கள் சொந்த புத்தியை உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கே ஒருவர் மூளைச்சலவை செய்வதைக் கேளுங்கள்.