வெள்ளி, 2 டிசம்பர், 2016
ஒரு காரசாரமான பதிவு
மனிதன் சாப்பிடுவது ருசிக்காகத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து வேறு பதிவிற்குச் சென்று விடுங்கள். உங்கள் நேரத்தை இங்கு விரயப்படுத்த வேண்டாம். ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.
ருசியை அறிவது நாக்கில் உள்ள ருசி அறியும் திசுக்களே. இவை 60 வயதாகும்போது பாதிக்கு மேல் செயலிழந்து போகின்றன என்று மருத்துவம் படிக்கும் என் பேரன் சொல்கிறான். அது உண்மைதான் என்று என் மனைவியும் சொல்கிறாள். அவள் எதை வைத்து அப்படி சொல்கிறாளென்றால், நான் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டில் ருசியே இல்லை என்று சொல்வதை வைத்து அப்படி சொல்கிறாள்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் கடைக்குப் போனபோது "மிளகாய் ஊறுகாய்" என்ற ஒன்றைப் பார்த்தேன். ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். பிரித்து ஒரு பாட்டிலில் போட்டு, சாப்பிடும்போது தயிர் சாப்பாட்டுக்கு அதை வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். தொட்டு வாயில் வைத்தவுடன், ஆஹா, அந்த அனுபவத்தை எப்படிச் சொல்வேன்?
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அப்படியே ஒரு சிலிர்ப்பு. அடுத்த வினாடியே ஒரு கவளம் தயிர் சாதம், எப்படி எடுத்தேன், எப்போது வாயில் போட்டேன், எப்படி விழுங்கினேன் என்பது ஒன்றும் நினைவில் இல்லை. இப்படியாக ஒரு அரை ஸ்பூன் ஊறுகாயில் தயிர் சாதம் முழுவதும் மறைந்தது.
ஆஹா, இந்த ஊறுகாய்தான் நமக்கு உகந்தது என்று முடிவு செய்து, இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போனால், சார், அந்த ஊறுகாய் நேற்றே தீர்ந்து விட்டது, ஆர்டர் போட்டிருக்கிறோம், வந்து விடும். அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போங்கள், என்றார்கள். வியாபார தந்திரம் எப்படி, பாருங்கள்.
பின்பு பல முறை போய்ப்பார்த்தும் அந்த ஊறுகாய் வரவேயில்லை. முதலில் வாங்கினது தீர்ந்து விட்டது. அந்த ஊறுகாய் இல்லாமல் தயிர் சாதம் உள்ளே போகமாட்டேனென்கிறது. என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.
அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. நாம் படித்த படிப்பென்ன, லேசான படிப்பா, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே, இந்த மிளகாய் ஊறுகாய் என்ன, ஆர்ய வித்தையா? என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில் பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)