புதன், 3 மே, 2017

1. நதிமூலம்-1

முதலில் பிரசுரித்த தேதி

Image result for spider solitaire

நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.

நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.

இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.

கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)

பின் குறிப்பு: நான் ஒரு மூன்று மாதங்களாக  புதிய பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் அன்பர்கள் ஒரு சிலர் இதனால்தான் பதிவுலகம் நசிந்து போய் விட்டது. அதனால் அதை    புனருத்தாரணம் செய்ய   நீங்கள் மீண்டும் எழுதவேண்டும். எழுதுவதை நிறுத்தின பிறகு மீண்டும் எழுத வேண்டுமென்றால் மிகுந்த சிரமம். அதனால் என்னுடைய பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் போடுவது அவரவர்கள் விருப்பம். போடாமலிருப்பது உத்தமம். ஏனெனில் எனக்கு மனதிற்குப் பிடிக்காத பின்னூட்டங்களை நிராகரிப்பதாக முடிவு செய்துள்ளேன். பிறகு உங்கள் சௌகரியம்.