வியாழன், 22 ஜூன், 2017
12. நான் படித்த புத்தகம்
கொலஸ்ட்ரால்-குறைப்பது எப்படி என்ற புத்தகத்தை டாக்டர் சு.முத்துக்குமாரசாமி என்பவர் எழுதி New Horizon Media Pvt. Ltd. என்ற நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் யாராவது கொஞ்சம் தலைக்கனம் பிடித்து அலைந்தால் ‘அவனுக்கு கொழுப்பு ஏறிப்போச்சு என்று சொல்வது வழக்கம்’. இது ஒரு பேச்சுக்காக சொல்வது. ஆனால் தற்போது பெரும்பாலான-வர்களுக்கு நிஜமாகவே கொழுப்பு அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் இதை நாகரிகமாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றவுடனேயே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ஏதோ அந்த மனிதனுக்கு வரக்கூடாத நோய் வந்து விட்டது, அந்த ஆள் அவ்வளவுதான் என்கிற மாதிரிதான் நினைக்கிறார்கள்.
டாக்டர் முத்து செல்லக்குமார் அவர்கள் இந்த புத்தகத்தில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன, மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வாறு இருக்கிறது, அதன் தேவை என்ன, கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பவைகளைப்பற்றி சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.
மனிதனின் உடம்பில் புரதம் மற்றும் கொலஸ்ட்ரால், இவை இரண்டும்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடம்பின் எல்லா பகுதிகளும் இந்த இரண்டு பொருள்களினால்தான் உருவாகியிருக்கின்றன. ஆகவே கொழுப்பையே உணவிலிருந்து விலக்குவது முடியாத காரியம். நாம் கொழுப்பை சாப்பிட்டே ஆகவேண்டும். ஆனால் எந்த வகையான கொலஸ்ட்ரால்கள் உடலுக்கு ஏற்றது என்று அறிந்து அவ்வகை உணவுகளைத் தேர்ந்து சாப்பிடவேண்டும். இதற்கான வழிகளை இந்த புத்தகத்தில் விரிவாக காணலாம்.
கொழுப்பின் வகைகளைப்பற்றியும் அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விரிவாக இந்தப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அதிகமாகிப்போனால் உடலில் வேண்டாத விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது எவ்வாறு ரத்தக் குழாய்களில் உட்புறம் படிந்து ரத்த அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது என்பதை நன்கு படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்த அடைப்பு இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பில் முடியும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.
கொழுப்பில் நல்லது, கெட்டது என்று இரண்டு வகை உண்டு என்பதே பலருக்கு ஒரு புதுமையான செய்தியாக இருக்கும். நம் உடம்பில் இந்த பல வகை கொலஸ்ட்ரால் சத்துக்கள் எவ்வளவு இருக்க வேண்டும், அவைகள் அதிகமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் விளக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒமெகா கொலஸ்ட்ரால் அமிலங்கள் என்றால் என்ன, அவை நமக்கு எவ்வாறு உபயோகப்படுகின்றன என்ற தகவல்கள் புதிதானவை. நம் உடம்பில் இருக்கும் பல்வேறு வகை கொலஸ்ட்ரால்களை எவ்வாறு டெஸ்ட் மூலம் கண்டு பிடிக்கலாம், அவை எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்ற கணக்குகளை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாதாரணமாகவே ஒவ்வொருவரும் தம்முடைய உணவு, உடற்பயிற்சி ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். ருசிக்காக எண்ணையில் பொரித்த பலகாரங்களை சாப்பிட்டால் எவ்வாறு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி கூட எவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரியங்களில் கவனமாக இருந்தாலே கொலஸ்ட்ரால் சம்பந்தமான பெரும்பாலான தொந்திரவுகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.
Fast Food கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தெருவோரங்களில் எண்ணையில் பொரித்துக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் இருக்கும் எண்ணையால் உடலுக்கு எவ்வாறு கேடு விளைகிறது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயன் படக்கூடியது. ஒவ்வொரு வகை உணவிலும் எவ்வளவு கொலஸ்ட்ரால்ச்சத்து உள்ளது என்ற பட்டியல் எல்லொருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் எந்தெந்த எண்ணைகள் சேர்த்துக்கொள்ளலாம், எவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. வயதான பிறகு தங்களுடைய உடல் நலத்தில் மூத்த குடிமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
சில குறைகள்;
பக்கம் 32ல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பல உணவு வகைகள் நம் நாட்டினருக்கு பரிச்சயமில்லாதவை. உணவு மாற்றங்களைப பற்றி எழுதும்போது சில இடங்களில் மிகவும் டெக்னிகலாக இருக்கின்றன. அவை மூத்த குடிமக்கள் பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடயதாகவே இருக்கிறது.
நல்ல சரளமான தமிழில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் அதை தைரியமாக பிரசுரித்த NHM நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படமும் மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கின்றன.
புத்தகத்தின் பிரசுர விவரங்கள்;
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
ஆசிரியர்; டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
முதல் பதிப்பு – அக்டோபர், 2008
128 பக்கம் விலை; ரூ.60
பிரசுரித்தவர்; பத்ரி சேஷாத்ரி
Published by:
New Horizon Media Pvt. Ltd.,
No. 33/15, Eldams Road,
Alwarpet, Chennai-600 018.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)