சனி, 23 டிசம்பர், 2017
32. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் ராம நவமிக்காக கச்சேரிகள் நடக்கும். எங்கள் வீட்டிற்கு நன்றாகக் கேட்கும். அப்படிக்கேட்டு கேட்டுத்தான் எனக்கு கர்னாடக சங்கீதத்தின் பேரில் ஒரு ஈடுபாடு வந்தது.
மதுரை மணி அய்யர், மதுரை சோமு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.எம். தண்டபானி தேசிகர், ஆலங்குடி சகோதரர்கள், காருகுறிச்சி அருணாசலம் முதலானவர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். இந்த வித்வான்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கச்சேரி நடக்கும் இடத்திற்கும் போவேன். ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டு திரும்பி விடுவேன்.
அப்போதெல்லாம் மேடையில் ஒரே ஒரு மைக் மட்டும்தான் வைப்பார்கள். வார்ப்பாட்டுக்காரருக்கு எதிரில் ஒரு ஒன்றரை அடி தூரத்தில் இந்த மைக் இருக்கும். கச்சேரியில் நடக்கும் வாய்ப்பாட்டு, பிடில், மிருதங்கம், கடம் ஆகியவைகளின் தொனி நன்றாகக் கேட்கும். அப்போதைய வித்வான்கள் மைக் வருவதற்கு முன்பே பாடுவதற்கு பழகியவர்கள். பெரிய கூட்டங்களில் கூட மைக் இல்லாமல் பாடக்கூடியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிறகு கொஞ்ச வருடங்களை கழித்து ஒவ்வொரு வித்வானுக்கும் தனித் தனி மைக்குகள் வைக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமாகியது. சில வித்துவான்கள் மைக் காரருடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்களின் மைக்குக்கு மட்டும் ஒலியைக் கூட்டுமாறு செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த சதி வேலைகளுக்கு எல்லையில்லாமல் போயிற்று. அப்போது இருந்த பாலக்காடு மணி என்பவர் பிரபல மிருதங்க வித்வான். அவர் மிருதங்க வாசிப்பு அவ்வளவு நன்றாக இருக்கும். அதனால் அவருக்கு ஏகப்பட்ட கிராக்கி. இந்த மைக் சதிகளைப் பார்த்து பொறுக்க மாட்டாமல் இனி மைக் வைக்கும் கச்சேரிகளுக்கு நான் மிருதங்கம் வாசிக்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டார்.
அவருடைய வாசிப்புக்காகவே பல கச்சேரிகள் மைக் இல்லாமல் நடந்தன. பிறகு காலம் மாறி விட்டது. பாலக்காடு மணி அய்யரும் போய்ச்சேர்ந்து விட்டார்.
1970 களில் என்று நினைக்கிறேன். அப்போது குமாரி - காயத்திரி அவர்களின் வீணைக் கச்சேரி அன்றைய புரந்தரதாஸ் அரங்கில் (கோவை) நடை பெற்றது. வீணையின் நாதம் கணீரென்று பது விதமாக இருந்தது. நன்றாக இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பிறகுதான் அதன் ரகசியம் வெளியானது. காயத்திரியின் தந்தை சினிமா உலகத்தில் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். அவர் வீணையில் ஒரு ஸ்பெஷல் மைக்கைப் பொருத்தி அதை கச்சேரி ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து விட்டார்.
வீணையின் நாதம் அட்டகாசமாக கேட்டது. பிறகு இந்த டெக்னிக்கை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இன்று கடத்திற்குக்கூட இந்த மாதிரி மைக் பொருத்தும் டெக்னிக்கை ஆரம்பித்து விட்டார்கள்.
தவிர இப்போது பாடும் வாய்ப்பாட்டுக் காரர்களின் பாட்டு எதிரில் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கூட சரியாக காதில் விழாது. அவ்வளவு குரல் வளம். ஆகவே அவர்களின் வாய்க்கருகே இரண்டு அங்குலம் தள்ளி மைக் வைக்கப்படுகிறது. தவிர ஒவ்விருவருக்கும் தனித்தனி மைக். மிருதங்க வித்வானுக்கு இரண்டு மைக். இனி பாடகரின் தாவாக்கொட்டையில் மைக் வைக்க வேண்டியதுதான் பாக்கி.
இந்த முறையில் ஒவ்வொரு வித்வானும் அவரவர்கள் மைக்கை அட்ஜஸ்ட் செய்கிறார்கள். மொத்தத்தில் இன்று நாம் கேட்கும் கச்சேரிகள் முற்றிலும் சின்ந்தெடிக் ஆக மாறி விட்டது. இது மட்டுமா? கச்சேரிகளில் இன்று தம்புரா என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட ஒன்றாக ஆகி விட்டது. அதற்கு எலெக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வந்து விட்டது.
அந்தக்காலத்தில் கச்சேரிகள் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும். வாய்ப்பாட்டுக்காரரைத் தவிர வேறு யாரும் தண்ணீர் அருந்தினதை நான் பார்த்ததில்லை. இன்று கச்சேரியில் ஒவ்வொருவர் பக்கத்திலும் இரண்டிரண்டு வாட்டர் பாட்டில்கள்.
இவ்வாறாக கர்னாடக சங்கீதம் கம்ப்யூட்டர் சங்கீதமாக மாறிக்கொண்டு வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)