மனிதன் இயற்கையில் மிகவும் நல்லவன். ஆனால் சூழ்நிலை அவனைப்பலவாறாக மாற்றுகிறது. குறிப்பாக அவன் அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்த பின் அவன் வெகுவாக மாறிப்போகிறான்.
நேற்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வேலை. ஒன்றுமில்லை. என்னுடைய மகளின் கார் பேங்க் லோனில் வாங்கியிருந்தாள். காரின் RC புத்தகத்தில் அந்த காரின் மேல் கடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த்து. கடன் கட்டி முடிந்தாகிவிட்டது. இந்த விபரம் அந்த காரின் RC புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தைப்பூர்த்தி செய்து அதனுடன் காரின் புகை சான்று, காரின் RC புத்தகம், இன்ஷூரன்ஸ் சான்று, பாங்கிலிருந்து கொடுத்த NOC, ஒரு ரிஜிஸ்டர் தபால் கவர் (30 ரூபாய்) இவைகளையெல்லாம் சேர்த்து பின் பண்ணி ரூபாய் 125 பணம் கட்டி அதற்கு உண்டான எழுத்தரிடம் கொடுக்கவேண்டும்.
ரொம்பவும் எளிதாக தோன்றுகிறதல்லவா! நேரில் அனுபவித்தால்தான் அதனுடைய சிரமம் தெரியும். பணம் கட்டுவதற்கு மட்டும் சுமார் பத்து பேரைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவுன்டரைக்காட்டினார்கள். எல்லா கவுன்டர்களிலும் கூட்டம். இதனிடையில் கம்ப்யூட்டர் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை இவ்வாறு அலைந்த பின்பு ஒரு கவுன்டரில் ஒருவாறாக பணத்தைக்கட்டி முடித்தேன். பின்பு இந்த பாரங்களை தபால் செக்சனில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு சொன்றால் தபால் வாங்குபவர் அங்கு இல்லை. வேறு அலுவல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். எப்போது வருவார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த போது அந்த ஆபீஸை சேர்ந்த ஒருவர் அந்த வழியில் போய்க்- கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒரு பெரிய வணக்கம் போட்டு ‘’சார், இந்த பாரத்தை தபால் செக்ஷனில் கொடுக்க வேண்டும். அங்கு அவரைக்காணவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்று அழாக்குறையாக சொன்னேன். அவர் இந்த உலகில் தப்பிப்பிறந்தவர். என்னுடைய பார்த்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து ‘’சார், நீங்கள் நாளை மாலை 4 மணிக்கு வந்து ஈ.4 செக்ஷனில் ஆனந்த் என்பவரிடம் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவருக்கு மிகுந்த நன்றி சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை 4 மணிக்கு ஈ.4 ஆனந்தைப்பார்த்தேன். அவர் பேரைக்கேட்டுவிட்டு ஆமாம், பாரம் இங்கேதான் இருக்கிறது, காலையில் பார்த்தேன், கொஞ்சம் உட்காருங்கள், தேடி எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன மாதிரியே 2 நிமிடத்தில் பாரத்தை எடுத்து விட்டார். ஆனால் அதில் ஒரு வேலையையும் செய்யவில்லை.
சார், கொஞ்சம் இருங்கள், என்று சொல்லிவிட்டு உடனே பழைய ரிஜிஸ்டரைத்தேடி எடுத்து என்ட்ரி போட்டு ஒரு 5 நிமிடத்தில் பாரத்தை என்னிடம் கொடுத்து ‘’ சார், இதை மேலே உள்ள தபால் செக்ஷனில் கொடுத்து என்ட்ரி போட்டு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். அதை வாங்கிக்கொண்டு தபால் செக்ஷனுக்கு போனேன். அவர் இருந்தார். அவருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இந்த பாரங்களைக்கொடுத்தேன். அவர் அதில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு காரின் RC புத்தகத்தையும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டையும் கொடுத்தார். ஒரு பெரிய சலாம் போட்டுவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
Ph.D. படித்து ஒரு அரசுப் பணியில் 38 வருடங்கள் வேலை பார்த்த எனக்கே இந்த RTO ஆபீஸ் வேலையில் இவ்வளவு அலைச்சல் பட வேண்டியிருந்ததென்றால் சாதாரண படிப்பு அதிகமில்லாத மக்கள் எப்படி இந்த மாதிரி காரியங்களைச் செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது ஒரு உண்மை தெரிந்தது. RTO ஆபீசுக்கு வெளியே சின்ன சின்னதாக டேபிள் போட்டுக்கொண்டு பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான பாரங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த பாரங்களை நிரப்பிக்கொடுத்தும் RTO ஆபீஸ் விவகாரங்களில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருக்கிறார்கள். மேலும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள். செய்யும் உதவிக்காக உதவிபெற்றவர்கள் கொடுக்கும் நன்றியை (பணம்) வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறார்கள். இவர்களின் பணி மகத்தானது. ஆனால ஜனங்களும் அதிகாரிகளும் இவர்களை ‘’புரோக்கர்கள்’’ என்று கேவலமாக சித்தரித்து இவர்கள் ஏதோ தீவிரவாதிகள் என்பது போல் நடத்துகிறார்கள். என்னுடைய பார்வையில் இவர்கள் செய்வது உண்மையான மக்கள் சேவை. வாழ்க இவர்கள் தொண்டு.
தொடரும்.....